விளம்பரங்கள் இல்லாமல் நடத்தப்படும் செய்திப் பகிர்வு வலைத்தளமான விக்கிபீடியா பொதுமக்களிடம் நன்கொடை கோரி உள்ளது. அதன் காரணமென்ன? உதவுவது எப்படி?
விக்கிபீடியா ஒரு கட்டற்ற கலைக் களஞ்சியம் ஆகும். இது பல்வேறு நாடுகளில், பல்வேறு மொழிகளில் தனது இலவச சேவையைத் தருகின்றது. ஆங்கிலம், டச்சு – உள்ளிட்ட மொழிகளில் உள்ள விக்கிபீடியாக்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட செய்திக் கட்டுரைகள் உள்ளன. தமிழில் விக்கிபீடியா கடந்த 2003ல் அறிமுகப்படுத்தப்பட்டது, தற்போது தமிழ் விக்கிபீடியாவில் 1 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செய்திக் கட்டுரைகள் உள்ளன.
இப்படிப் ,பல லட்சம் செய்திக் கட்டுரைகளைத் தாங்கி உள்ள விக்கிபீடியாவுக்கு விளம்பர வருவாயோ, பங்குகள் விற்பனை மூலமான வருவாயோ இல்லை. இதனால் விக்கிபீடியா எப்போதும் வருவாய்க்கு நன்கொடைகளை மட்டுமே நம்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனக்கு வந்த நன்கொடை விவரங்களையும் அது பொதுவெளியில் வெளியிட்டு வருகிறது.
இந்த நன்கொடைகள் குறையும் போது விளம்பரம் வெளியிட்டு நன்கொடைகளை பெருக்கும் வழக்கமும் விக்கிபீடியாவுக்கு உண்டு. கடந்த 2013ஆம் ஆண்டில் விக்கிபீடியா தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட போது மக்களிடம் நன்கொடைகளைக் கேட்டுப் பெற்றது , இப்போது விக்கிபீடியாவின் நன்கொடைகள் பெருமளவில் குறைந்துள்ள நிலையில், மீண்டும் மக்களிடம் விக்கிபீடியா நன்கொடை கோரி உள்ளது.
இந்திய மக்களிடம் 150 ரூபாய் அல்லது அதற்கு மேலான தொகையை விக்கிபீடியா தனது விளம்பரம் மூலம் கேட்டுள்ளது, அந்த விளம்பரத்தில் ஒரு திரைப்பட டிக்கெட்டின் விலைக்கு சமமான அந்தத் தொகையால் விக்கிபீடியாவின் சேவை இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரும் என்பதால் உதவும்படி கேட்கப்பட்டுள்ளது. விக்கிபீடியா பக்கங்களில் காணப்படும் இந்த விளம்பரங்களில் உள்ள இணைப்புகள் மூலம் கொடையாளர்கள் நன்கொடைகளை வழங்கலாம்.
கடந்த 2013ஆம் ஆண்டில் விக்கிபீடியா பொதுமக்களிடம் நன்கொடை கேட்டபோது, அதற்கு அதிக நிதி கொடுத்த நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாம் இடத்தைப் பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.