அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ரகசியங்களை வெளியிட்ட விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முக்கிய ரகசியங்களை தனது விக்கி லீக்ஸ் இணையத்தில் வெளியிட்டு உலக நாடுகளை அதிர வைத்தார். இதனையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அசாஞ்சேவை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தன.
இதனால் அசாஞ்சே இங்கிலாந்தில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். இந்நிலையில், பாலியல் குற்றசாட்டில் சிக்கிய அவருக்கு, இங்கிலாந்து நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாயிருந்த ஜூலியன் அசாஞ்சேவை, நீதிமன்ற நெறிமுறைகளை மீறியதாக இங்கிலாந்து போலிசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, அசாஞ்சே கைது செய்யப்பட்டதற்கு பதிலளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ஈக்வடார் அதிபர் லெனின் மொரீனோ, இதுவரை அசாஞ்சேவிற்கு அளித்த புகலிடத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், தொடர் குற்றச்செயல்களில் அவர் ஈடுபட்டதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.