மனைவியை பிரிந்து வசிக்கும் காவலரை பெட்ரோல் ஊற்றி ஏரிப்பு

சென்னை அடுத்த திருமுல்லைவாயல் காவலர் குடியிருப்பில் மனைவியை பிரிந்து வசிக்கும் காவலரை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொன்ற கள்ளக்காதலியை காவல்துறையினர் கைது செய்தனர்…

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்துவந்தவர் வெங்கடேசன் . ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாம் அணியில் காவலராக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் விழுப்புரம். மனைவி பெயர் ஜெயா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். வெங்கடேஷுடன் மகளும், ஜெயாவுடன் மகனும் வசித்து வருகின்றனர். இதற்கிடையே வெங்கடேஷ் சென்னையில் இளைஞர் காவல் படையில் பணியாற்றியபோது புளியந்தோப்பு பகுதியை சார்ந்த ஆஷா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 7 மாதத்திற்கு முன்பு ஆஷா தனது கணவர் ஜோதிராமலிங்கம் மற்றும் 2 குழந்தைகளை விட்டுவிட்டு காவலர் குடியிருப்பில் வெங்கடேஷுடன் வந்து குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் வெங்கடேஷ் நடத்தையில் ஆஷா சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டார். மேலும் அவர் யாரிடமாவது பேசினால் செல்போனை பிடுங்கி யார்? என விசாரித்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வெங்கடேஷ் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஆஷா, ‘‘எங்கு சென்றுவிட்டு வருகிறாய்?’’என கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது வெங்கடேஷ், ‘‘என்னிடம் அடிக்கடி தகராறு செய்தால் செத்து விடுவேன் அல்லது உன்னை பற்றி காவல்நிலையத்தில் புகார் செய்வேன்’’ என ஆஷாவிடம் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் அதிகரித்து அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆஷா வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வெங்கடேஷ் மீது ஊற்றி, தீ வைத்துள்ளார். உடல் மளமளவென பற்றி எரிய தொடங்கியதும் வலி தாங்காமல் வெங்கடேஷ் சத்தம்போட்டு அலறியுள்ளார். இதை பார்த்த ஆஷா மொபட்டில் ஏறி தப்பி சென்றார். வெங்கடேஷ் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் கேஎம்சி மருத்துவமணையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட வெங்கடேஷ் இன்று காலை 6 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார் மேலும் கொலை முயர்ச்சி வழக்கு பதிவுசெய்யபட்டு சிறையில் அடைக்கபட்ட ஆஷா மீது கொலை வழக்கு பதிவு செய்யபட்டது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version