நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதேபோல் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகலான கற்குடி, கட்டளைக்குடியிருப்பு, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக வெயில் கொடுமையால் வாடிய பொதுமக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போடி உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழையும், தேவாரம், கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல், மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. வெயில் வாட்டி வந்த நிலையில், எதிர்பாராத இந்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இடி மின்னல் காரணமாக மேலூரில் சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது.
நீலகிரி மாவட்டம் உதகையில் கனமழை பெய்தது. கடந்த இரண்டு தினங்களாக உதகை மற்றம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், உதகை நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.