சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மிதமான மற்றும் கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையில் நேற்று பகல் முழுவதும் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு முழுவதும் மழை பெய்தது. தாம்பரம், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், எழும்பூர், வடபழனி, அடையாறு, பெரம்பூர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் ஆங்காங்கே மழை விட்டு விட்டு பெய்தது.
அரியலூர் மாவட்டத்தில் வெப்பசலனம் காரணமாக, கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வந்த நிலையில் தற்போது செந்துறை, பொன்பரப்பி, ஆர்.எஸ்.மாத்தூர், இராயம்புரம், இரும்புலிகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான குத்தாலம், மங்கநல்லூர், மணல்மேடு, கோமல் பாலையூர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது. ஆடி மாதத்தில் மழை குறைவாக காணப்படும் என கூறப்பட்ட நிலையில், வழக்கத்திற்கு மாறாக நிகழாண்டில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பத்து சென்டிமீட்டருக்கு மேல் கடந்த ஒரு வாரத்தில் மழை பெய்துள்ளது
இதேபோல், கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் வேப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு பரவலாக மழை பெய்தது. ஆடி மாத துவக்கத்தில் மித மழை பெய்ததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் பருத்தி, சோளம், உளுந்து, கம்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.