இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் ஆட்டம் இன்று பார்படாளி தொடங்குகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பழிதீர்க்க துடியாய் இருக்கிறது. இருப்பினும் டெஸ்ட் போன்று ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தங்களின் பலத்தைக் காட்டுவதற்கு முனைப்புக் காட்டக்கூடும். இந்தப் போட்டிகள் வருகின்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்விற்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த வகையில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சஹால், உம்ரான் மாலிக், முகமது சிராஜ் போன்றவர்களுக்கு இந்த ஒருநாள் போட்டிகள் நல் வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் சில குறைகள் இருப்பதும் கவனிக்கத்தக்க ஒன்றுதான். குறிப்பாக் சூர்யகுமாரால் டி20யில் ஜொலித்த அளவிற்கு ஒருநாள் போட்டியில் ஜொலிக்க முடிவதில்லை. ஆஸ்திரேலியா போட்டியில் தொடர்ந்து டக் ஒவுட் ஆகி மோசமான பார்மில் உள்ளார். இதனால் அணியில் நான்காவது இடத்திற்கு போட்டி வலுத்துள்ளது. அதேபோல ரிஷாப் பண்ட் இல்லாததால், விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷனுக்கு இடையே போட்டிகள் வலுபெற வாய்ப்பிருக்கிறது. சஞ்சு சாம்சனைப் பொறுத்தவரை அவருக்கு அணியில் நிலையான இடம் என்று ஒன்று இருந்ததில்லை. திடீரென்று சுனாமி காட்டு காட்டுவார். பிறகு அமைதியாக ரன்கள் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்புவார். 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன் வெறும் 66 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.
ஷுப்மன் கில் ஓபனிங் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தை வலுவாகப் பிடித்துவிட்டார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைப்பது என்பது சந்தேகம் தான். ஹர்திக் பாண்டியா நீண்ட நாட்களுக்குப் பிறகு தேசிய அணிக்கு திரும்பியுள்ளார். இந்தியாவின் அதிவேகமான இம்ரான் மாலிக்கிற்குதான் இந்த வாய்ப்பு சரியாக கிட்டியுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருக்கும். சாதரணமாக 150 கி.மீ வேகத்தில் பந்துவீசக் கூடியவர் மாலிக். ஆனால் அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பார் என்பதுதான் குற்றச்சாட்டு. கடந்த ஆஸ்திரேலிய சீரிஸில் குல்தீப் யாதவிற்கு முக்கியத்துவம் கொடுத்ததுபோல, இந்த சீரிஸில் சஹாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ்தான் தற்போதைய சீனியர். பின்னர் உதன்கட், முகேஷ் குமார், ஷர்துல் தாக்குர் ஆகியோரும் லைனில் வரிசைக் கட்டி உள்ளனர்.
இரு அணிகள் விவரம்
மேற்கு இந்திய தீவுகள்
ஷாய்ஹோப், ரோவ்மன் பவல், அலிக் அத்தனாஸ், யானிக் கரியா, கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், கெவின் சின்க்ளேர், ஓஷேன் தாமஸ்.
இந்தியா
ரோகித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில், ருதுராஜ், சூர்யகுமார், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், சஹால், குல்தீப் யாதவ், ஜெயதேவ் உனத்கட், மொகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
Discussion about this post