நிதி மோசடி குறித்து காவல் ஆணையரிடம் சிபிஐ விசாரணை நடத்துவதை தடுப்பது ஏன்? என்று, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய சட்டத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான ரவி சங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். நிதி நிறுவன மோசடி குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ மூன்று முறை சம்மன் அனுப்பியும் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் பதிலளிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
நிதி நிறுவன மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் மதன் மித்ரா, சுதிப் மற்றும் இரண்டு எம்.பிக்கள் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டிய ரவி சங்கர் பிரசாத், அப்போது எல்லாம் அமைதியாக இருந்துவிட்டு காவல் ஆணையரிடம் சிபிஐ விசாரணை நடத்த முயலும்போது அதை மம்தா பானர்ஜி தடுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் ஊழல் கூட்டணி மூலம் தங்களை காத்துக்கொள்ள முயல்வதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.
இதேபோல், இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர் ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஊழல்வாதிகளை காப்பதற்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்தும் போராட்டம் மக்களிடம் எடுபடாது என்றும் ஊழலுக்கு எதிரான கட்சி பா.ஜ.க எனக் கூறினார்.
மம்தா பானர்ஜியின் தர்ணா குறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து தெரிவிக்கையில், பிரதமர் வேட்பாளர் என்ற இலக்கை மனதில் வைத்தே, மம்தா பானர்ஜி இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.