ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது ? – உயர்நீதிமன்றம்

அனைவருக்கும் வீடு திட்டம் முழுமையாக நிறைவேறும் வரை தனி நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, வீடு வாங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவந்தால் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றுவது தடுக்கப்படுமென தெரிவித்தது.

ஒருவர் ஒன்றும் மேற்பட்ட வீடுகள் வாங்க ஏன் தடை விதிக்கக் கூடாது என்றும், வெளிநாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவில் வீடு, நிலம் வாங்க ஏன் கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version