காவல் ஆணையரை காப்பாற்ற மம்தா முயற்சிப்பது ஏன்? -ரவிசங்கர் பிரசாத்

மேற்குவங்கத்தில் கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையரை காப்பாற்ற மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சிப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவரான கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மம்தா பானர்ஜியின் தர்ணா குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக திரண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட எதிர்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் அனைவரும் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட அக்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் கைது செய்யப்பட்டபோதெல்லாம் அமைதியாக இருந்த மம்தா பானர்ஜி, தற்போது காவல் துறை ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்படும்போது தர்ணாவில் ஈடுபடுவது ஏன் என ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். காவல் துறை ஆணையர் ராஜீவ் குமார் பல ரகசியங்களை தம்மிடம் வைத்திருப்பதால்தான் அவரைக் காக்கும் முயற்சிகளில் மம்தா ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version