மரகத லிங்கம் ஏன் திருடப்படுகிறது?

திருவண்ணாமலையில் கடந்த 2017ஆம் ஆண்டில் காணாமல் போன வேட்டவலம் அம்மன் கோவிலுக்குச் சொந்தமான மரகத லிங்கம், தேடுதல் பணிகளின் பயனால் குப்பைத் தொட்டியில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

மரகத லிங்கம் என்றால் என்ன? அது ஏன் திருடப்படுகிறது? 

பச்சை நிறத்தை உடைய மரகதக் கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கத்தையே மக்கள் ‘மரகத லிங்கம்’ – என அழைக்கின்றனர். மரகத தனிமம் ’கல்’ என்று அழைக்கப்பட்டாலும், அது கண்ணாடி போன்றது, எளிதில் உடையக் கூடியது. ஒளியை உமிழும் தன்மையும் இதற்கு உண்டு. நவரத்தினங்களில் ஒன்றான மரகதம் ஆங்கிலத்தில் ‘எமரால்டு’ – என்று குறிக்கப்படுகிறது. வைரத்திற்கு அடுத்த அதிக விலை கொண்ட ரத்தினம் இதுவாகும்.

முதல் தரமான மரகதம் கொலம்பிய சுரங்களில் கிடைக்கின்றன. இந்தியா, எகிப்து. பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளிலும் மரகதக் கற்கள் பூமியில் இருந்து மிக அரிதாகக் கிடைக்கின்றன. பூமியில் உள்ள மரகதத்தை அடையாளம் காண்பதும் பிரித்தெடுப்பதும் மிகக் கடினமானவை ஆகும்.

மரகத லிங்கத்திற்கு பாலும் நீரும் கொண்டு திருமுழுக்கு செய்யும் போது அவை பச்சையாக நிறம் மாறுவது தெய்வ அருள் என்று நம்பப்படுகிறது. புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கமாக செய்து வழிபடுவது சிறந்தது – என்று புராணங்களும் கூறுகின்றன. மரகத லிங்க வழிபாடு சகல தோஷங்களில் இருந்தும் விடுதலை தரும் என்றும் நம்பப்படுகிறது. இதனால் பக்தர்கள் மரகத லிங்கங்களை விரும்பி வழிபாடு செய்கின்றனர்.

தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் ஜமீன்களும் பெரும் பணக்காரர்களும் பல கோவில்களில் மரகத லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு உள்ளனர். மரகதக் கற்கள் விலை உயர்ந்தவை என்பதாலும், மரகத லிங்கங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளதாலும் சிலை திருடர்களுக்கு இவை இலக்காகின்றன. சிலைகளுக்கான கள்ளச் சந்தையில் மரக லிங்கங்கள் அவற்றின் பழமை மற்றும் எடை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல கோடிகளுக்கு விலை பேசப்படுகின்றன. உதாரணமாக சமீபத்தில் மீட்கப்பட்ட வேட்டவலம் மரகத லிங்கத்தின் சந்தை மதிப்பு 5 கோடி என்று கணிக்கப்பட்டு உள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் தியாகராய சுவாமி கோவிலில் 1992ம் ஆண்டு திருட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையுடைய 250 கிராம் எடையுள்ள மரகத லிங்கம் கடந்த 2009ஆம் ஆண்டில் மீட்கப்பட்டபோது, அதன் மதிப்பு 5 கோடி என்று டி.ஜி.பி. திலகவதி தலைமையிலான தமிழக பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்தது.

மரகத லிங்கங்கள் குறித்த விழிப்புணர்வு சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மற்றும் ஆர்வலர்கள் துணையோடு திருடப்பட்ட பல மரகத லிங்கங்கள் தொடர்ந்து அரசால் மீட்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version