செந்தில்பாலாஜி பதற்றம் அடைவது ஏன்? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

பண மோசடி வழக்கில், திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியின் தரப்பு பதற்றம் அடைவது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி மீது பல்வேறு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை, எம்.பி. – எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில்பாலாஜியின் வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து, இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென இரண்டு பேர் சார்பாக நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால், குறுக்கீட்ட நீதிபதி பதற்றம் அடைவது ஏன்? என கேள்வி எழுப்பினார். எத்தனை ஆண்டுகள் கழித்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடினாலும் அதை விசாரிக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை எனக் கூறிய நீதிபதி, அவர்களது வாய்ப்பை நீதிமன்றம் மறுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். இடையீட்டு மனுதாரர்கள் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிலுவையில் உள்ள வழக்கை, இந்த வழக்கோடு சேர்த்து விசாரிக்க ஏதுவாக அவற்றை விசாரணைக்கு பட்டியலிடும் படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற17ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

Exit mobile version