டி.ஆர்.பாலு பதிலளிக்க மறுப்பு தெரிவிப்பது ஏன்?

முதலமைச்சர் எழுப்பியுள்ள நியாயமான கேள்விகளுக்கு, திமுகவின் டி.ஆர்.பாலு பதிலளிக்க மறுப்பு தெரிவிப்பது ஏன்? என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய-மாநில நெடுஞ்சாலைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் டி.ஆர்.பாலுவுக்கு, மாநில நெடுஞ்சாலைப் பணிகளை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகள் தெரியாமல் போனதால் ஆப்பிள், பேரிக்காய் என கூறியிருப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் மீதான களங்கங்களை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற கற்பனையில் வாழும் டி.ஆர்.பாலு, தன் மகன்கள் நடத்தி வந்த king power corporation மற்றும் king chemicals என்ற நிறுவனத்திற்காகவும், தான் பிறந்த சொந்த மாவட்டத்தையும், அதன் இயற்கை வளங்களையும், இந்திய தேசத்தின் சொத்துக்களையும் சூறையாடியதை, அத்தனை எளிதில் மக்கள் மறந்துவிட முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து 2008-ல், நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த டி.ஆர்.பாலுவின் ஊழல் பட்டியலை விரிவாக மீண்டும் எடுத்துரைக்க வேண்டிய நேரம் விரைவில் வரப்போகிறது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு பணி மேற்கொள்ளப்படுவதை நடைமுறைப்படுத்த, மூத்த அதிகாரிகளைக் கொண்ட, Evaluation Committee எனப்படும் மதிப்பீட்டு குழுவும், Steering Committee எனப்படும் வழிக்காட்டு குழுவும் உள்ளதாக அமைச்சர் தங்கமணி சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுக ஆட்சிக் காலத்தில், ஒப்பந்த விண்ணப்பங்களை பெட்டியில் போடும் திட்டம் நடைமுறையில் இருந்ததாகவும், தற்பொழுது, ஆன்லைன் டெண்டர் முறையில், ஊழல் முறைகேட்டிற்கு வழியில்லாத வகையில் டெண்டர் பணிகள் நடைபெறுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு, டி.ஆர்.பாலு மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது ,ஒரு கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்கு 8 கோடியே 78 லட்சம் செலவானது எப்படி? என முதலமைச்சர் எழுப்பி கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க திமுகவின் டி.ஆர்.பாலு மறுப்பு தெரிவிப்பது ஏன்? என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version