ஹாங்காங்கில் போராடும் மக்களுக்கு எதிராக செயல்பட்ட சீன அரசின் கணக்குகளை பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கி உள்ளன. சீன அரசுடன் சமூக வலைத்தளங்கள் மோதுவது ஏன்?
1997ல் சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாக ஹாங்காங் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் ஹாங்காங்கின் தனித்தன்மைகளில் சீன அரசு தொடர்ந்து தலையிட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சீனாவுக்கு எதிராக்க பல போராட்டங்கள் ஹாங்காங்கில் நடந்துள்ளன. சமீபத்தில் ஹாங்காங்கில் கைதாகும் நபர்களை சீனாவின் சிறைகளில் அடைக்கும் திட்டத்தை சீனா கொண்டு வந்ததால், ஹாங்காங்கில் பெரும் போராட்டம் தொடங்கியது. அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுடன் இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து ஹாங்காங் போராட்டக்காரர்கள் அமைதி வழியில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், சீன அரசானது பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் பல்வேறு கணக்குகளைத் தொடங்கி ஹாங்காங் போராட்டக்காரர்களை தீவிரவாதிகள், கரப்பான் பூச்சிகள் என்றெல்லாம் விமர்சித்தது.
இந்த சூழலில்தான் பேஸ்புக்கும், டுவிட்டரும் சீன அரசின் சார்புடைய 900 கணக்குகளை முடக்கி உள்ளன. ஹாங்காங்கில் நடந்துகொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களை இழிவாகப் பேசுவதையும், போராட்டக்காரர்களை தவறாக சித்தரிப்பதையும் அனுமதிக்க முடியாது என்றும், ஆரோக்கியமான மற்றும் வெளிப்படையான கருத்துரையாடலைத் தாங்கள் பாதுகாக்க விரும்புவதாகவும் அவற்றின் அறிக்கைகள் தெரிவித்து உள்ளன.
இதனால் சீன அரசின் சார்புடைய கணக்குகள், சீன சார்பு செய்தி நிறுவனங்களின் விளம்பரங்கள் ஆகியவற்றை சமூக வளைத்தளங்கள் முற்றிலுமாகப் புறக்கணித்து உள்ளன. இது சீனாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.