டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கடந்த ஆண்டு போராட்டம் நடத்திய ஸ்டாலின், இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு மதுக்கடைகளை திறந்தது ஏன் என அதிமுக துணை கொறடா அரக்கோணம் ரவி கேள்வி எழுப்பினார்.
கொரோனா இரண்டாம் அலையில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்த சூழலில் திமுக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது தொடர்பாக சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.
அரக்கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக துணை கொறடாவுமான ரவி பேசியபோது, அதிமுக ஆட்சியின்போது டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டம் நடத்திய ஸ்டாலின், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடைகளை திறந்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.
கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு ஜீனில் தினசரி பாதிப்பு 7 ஆயிரமாக மட்டுமே இருந்தது, தற்போது அதைவிட அதிகம் என்றார்.