குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரின் டுவிட்டர் பக்கங்களை பின்தொடர்வதை நிறுத்தி கொண்டது தொடர்பாக, அமெரிக்க வெள்ளைமாளிகை விளக்கமளித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரின் டுவிட்டர் பக்கங்களை வெள்ளை மாளிகை பின்தொடர்ந்தது. உலகில் வேறு எந்த பிரதமரையும் பின்தொடராத வெள்ளை மாளிகை, பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தை பின்தொடர்வதாக கூறப்பட்டது. இந்நிலையில், திடீரென அவர்களது டுவிட்டர் பக்கங்களை பின்தொடர்வதை அமெரிக்கா நிறுத்தி கொண்டது. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகை, அமெரிக்க அதிபர் எந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் அந்த நாட்டின் தலைவர்கள் மற்றும் தூதரக டுவிட்டர் பக்கங்களை பின் தொடர்வது வழக்கம் எனக் குறிப்பிட்டுள்ளது.
பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் இந்தியா வந்திருந்த நிலையில், அவர்களது பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களுக்காக டுவிட்டர் பக்கங்களை பின்தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.