கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாநில அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் கர்நாடக அரசியல் களம் உச்சகட்ட கொதிநிலையில் உள்ளது. அங்கு ஏன் இத்தனை அரசியல் குழப்பங்கள்? மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்கிறதா? இந்த சிறப்புத் தொகுப்பில் காணலாம்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 224 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் – 79 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் – 37 தொகுதிகளிலும், பாஜக 105 தொகுதிகளிலும், சுயேட்சை 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளில் வென்றன.
மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டாக சேர்ந்து 2 சுயேட்சை மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. 105 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜ.க.வால் பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை பெற முடியவில்லை.
இந்த சூழலில் அமைச்சர் பதவி, இலாகா ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து 13 கூட்டணி எம்.எல்.ஏக்கள் மற்றும் 1 சுயேட்சை தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ராஜினாமா செய்த 14 பேரும் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளனர்.
ஒருவேளை, 14 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களும் சபாநாயகரால் ஏற்கப்பட்டுவிட்டால் அவையின் பலம் 210 ஆகக்குறைந்துவிடும். அப்போது பெரும்பான்மைக்கு 106 உறுப்பினர்கள் தேவை. 14 எம்எல்ஏக்கள் ராஜினாமாவுக்குப் பிறகு காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியின் பலம் 105 ஆக குறைந்துவிடுவதால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழ்ந்துவிடும்.
இந்த நெருக்கடியில் காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ நாகேஷ், பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய்வாலாவிடம் கடிதம் அளித்துள்ளார். 105 உறுப்பினர்களை பெற்றுள்ள பாஜக, சுயேட்சை எம்எல்ஏவின் ஆதரவைப் பெற்றுவிட்டதால், 106 என்ற பெரும்பான்மைக்கு தேவையான பலத்துடன் உள்ளது.
இதனிடையே அதிருப்தியாளர்களை சமாதானம் செய்யும் வகையில் 21 காங்கிரஸ் அமைச்சர்களும், மதச்சார்பற்ற ஜனதா தள அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே குடகு மாவட்டத்தில் உள்ள, ‘பேடிங்க்டன்’ சொகுசு விடுதியில் 35 அறைகள் மஜத எம்.எல்.ஏக்கள் தங்கும் வகையில் அடுத்த மூன்று நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பெங்களூரில் உள்ள கர்நாடக பவனில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, கர்நாடகாவில் நிகழும் அரசியல் குழப்பத்திற்கு பாஜக காரணம் இல்லை என மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். பாஜக எப்போதுமே குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதையடுத்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை இழந்துவிட்டதால் முதலமைச்சர் பதவியை குமாரசாமி உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மாநில பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் அரசியல் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.