கொரோனா குறித்த WHO-ன் கருத்தால் குழப்பம்!

கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளிடம் இருந்து பிறருக்கு நோய் பரவுமா, பரவாதா என்பதில் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

கொரோனா நோயாளிகளில் ஐந்தில் 4 பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை என அண்மையில் ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். இத்தகைய நோய் அறிகுறியற்றவர்கள் மூலம் வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.ஆனால், இந்த கருத்திற்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. இது தொடர்பாக பேசிய, உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப பிரிவு தலைவர் Maria Van Kerkhove, நோய் அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து பிறருக்கு நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிக குறைவு என விளக்கம் அளித்தார். பல்வேறு நாடுகளில் இது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த கருத்து மருத்துவ உலகில் பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அறிகுறி இல்லாத நோயாளிகளிடம் இருந்து கொரோனா பரவாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என, பாரீசை சேர்ந்த மருத்துவர் Gilbert Deray கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல், உலக சுகாதார நிறுவனத்தின் இந்த கருத்து ஆச்சர்யம் அளிப்பதாக, லண்டனைச் சேர்ந்த தொற்றுநோய் துறை மருத்துவர் Liam Smeeth கருத்து கூறியுள்ளார். மேலும், 30% முதல் 50% வரையிலான நோயாளிகள் அறிகுறி அற்றவர்களாக உள்ளதாகவும், அவர்களிடமிருந்து அதிகளவில் பிறருக்கு நோய் தொற்று பரவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு மருத்துவர்களும் இதே போன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றன. இருந்தபோதிலும் உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த தலைவர் Maria Van Kerkhove தனது கருத்தில் உறுதியாக உள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அறிகுறி உள்ள நோயாளிகளை காட்டிலும், அறிகுறியற்ற நோயாளிகளிடம் இருந்து கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளதாக மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைதளத்தில் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோதும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சில ஆய்வறிக்கைகளின் அடிப்படையிலேயே தான் அந்த கருத்தை தெரிவித்ததாக கூறினார். இருப்பினும், இது தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என Van Kerkhove குறிப்பிட்டார்.

இவரின் இந்த கருத்தை உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் Mike Ryan-ம் ஆதரித்துள்ளார். இது தொடர்பான விவாதத்தை தாங்கள் வரவேற்பதாகவும், சரியான வார்த்தைகளை பயன்படுத்தாததால் தங்கள் கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version