உண்மைக்குப் புறம்பான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் இயக்குனர் ரஞ்சித்துக்கும், ஒடிடி தளத்தில் வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வரலாற்று படமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இயக்குனர் பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம், யாரையோ ஒரு நபரை திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காக, நடக்காத ஒரு விஷயத்தை சொல்லியிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
1970 ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டாரே ஒழிய, மிசாவில் அவர் கைது செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர்,
அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலினை முன்னிலைப் படுத்த வேண்டும் என்பதற்காக, உண்மைக்கு மாறான தகவல் சொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மிசாவை பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷனின் அறிக்கைகளையும், அந்த அறிக்கையின் 575 பக்கங்களிலும், ஸ்டாலினுடைய பெயர் எந்த இடத்திலும் பதிவாகவில்லை என்றும், இதனை திமுகவினரும் நிரூபிப்பதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
உண்மைக்குப் புறம்பான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் சார்பட்டா திரைப்படம் அமைந்திருப்பதாகவும், இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்து தண்டிக்கப்படக் கூடிய குற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த வசனத்தை உடனடியாக நீக்கி, மறுவெளியீடு செய்ய வேண்டும் என்றும், தவறுகின்ற பட்சத்தில் உரிமையியல் மற்றும் குற்றவியல் விளைவுகளையும் படக்குழு சந்திக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்தியுள்ளார்.