நேர்மையான பத்திரிகையாளர்கள் மத்தியில் புலனாய்வு பத்திரிகையின் ஆசிரியர் என கூறிக் கொண்டு, நல்லதை செய்யும் நல்லவர்களை பற்றி அவதூறு பரப்பி தன் சொந்த பொருளாதார லாபத்திற்காக மிரட்டும் மேத்யூ சாமுவேல் யார் தெரியுமா?
தெகல்கா பத்திரிகையின் பெயரை பயன்படுத்தி கொண்டு, பணியில் இருந்து நீங்கி 3 ஆண்டுகளானாலும் இன்றும் தன்னை தெகல்காவின் மாஜி ஆசிரியராக அடையாளப்படுத்திக் கொண்டு புலனாய்வு என்ற பெயரில் யார் யாரிடமோ பணம் பெற்று கொண்டு பொய்யை வாரி இறைக்கும் டெல்லி பத்திரிகையாளர்தான் மேத்யூ சாமுவேல்.
புலனாய்வு இதழியலின் முன்னோடி எனத் தன்னை அடையாளப்படுத்திய தெகல்காவின் ஆசிரியர் தருண் தேஜ்பால் தான் ” மீ டூ “- குற்றச்சாட்டுக்கு முன்னோடி. தன்னுடன் பணியாற்றிய சக ஊழியரை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக தற்போது சிறையில் உள்ளார் தருண். அண்ணன் எப்போது எழுந்திரிப்பான், திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருந்து கன கச்சித்தமாக தேஜ்பாலின் இடத்தை கைப்பற்றியவர்தான் மேத்யூ சாமுவேல். தேஜ்பால் கைதின் போது அதே பத்திரிகையில் சிறப்பு செய்தியாளராக இருந்த மேத்யூ சாமுவேல் தன்னுடைய நரித் தந்திரத்தால் ஆசிரியர் பொறுப்புக்கு ஒரே தாவலில் வந்தது தனிக்கதை.
தெகல்காவில் ஆசிரியர் பொறுப்புக்கு குறுக்கு வழியில் வந்த சாமுவேலுக்கு பத்திரிகையை உயிரோட்டத்துடனும், உத்வேகத்துடனும் நடத்தத் தெரியவில்லை, அதனால் அவர் கையாண்ட உத்திதான் “ஸ்டிங் ஆபரேசன்” என்ற புதுக்கதை. தெகல்காவில் எடிட்டர் பதவியில் கொஞ்ச நாளைக்கு வண்டி ஓட்ட வேண்டும் என்று திட்டமிட்ட மேத்யூ சமூகத்தில் புகழ்பெற்றவர்கள் பற்றியும், அரசு உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் பற்றியும் வெளிச்சத்திற்கு வராத கதைகளை சொல்லுகிறேன் என்ற பெயரில் பொய்யும், புரட்டுமாக சொன்ன கதைகள் நீண்ட நாட்களுக்கு எடுபடவில்லை. காரணம், அவைகள் எதற்குமே முறையான ஆவணங்களோ, ஆதாரங்களோ இல்லை. இது சிபிஐ விசாரணையில் தெரிய வந்ததால் மேத்யூ ஒரு ஏமாற்று பேர்வழி என்ற உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து மக்களின் நம்பிக்கையை இழக்க ஆரம்பித்த தெகல்கா அதற்கு காரணமான மேத்யூவை கடந்த 2016 ஆம் ஆண்டு நிறுவனத்தை விட்டே வெளியேற்றியது.
என்ஆர்ஐகளின் உதவியுடன் தெகல்காவின் போலி ஆவணப்படங்களில் கிடைத்த வருவாயை வைத்து சொந்தமாக நாரதா நியூஸ் என்ற பெயரில் பத்திரிகையை ஆரம்பித்த மேத்யூ தன்னுடைய அதே பழைய மிரட்டல் வேலைகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்தார். தன்னுடைய நிறுவனத்தின் பெயருக்கு ஏற்ப அச்சு அசலாக நடந்து கொண்ட மேத்யூ திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்களை சிக்க வைக்க இவரே அவர்களுக்கு பணம் கொடுப்பது போல கொடுத்து அதை இவரே புகைப்படம் எடுத்து அவர்களிடத்திலேயே ஒரு கணிசமான தொகையை கேட்டு மிரட்டினார். மேத்யூவின் மீதான அந்த வழக்கு இன்னும் சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேத்யூ ஆரம்பித்த நாரதா நியூஸ் போணி ஆகாததால் அவரிடம் பணியாற்றிய 20 ஊழியர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதியமே தரவில்லை. சம்பளபாக்கியை இதோ தருகிறேன், அதோ தருகிறேன் எனப்போக்கு காட்டி வரும் மேத்யூ மீது ஊழியர்கள் கொடுத்துள்ள புகாரின் பேரில் புது தில்லி புஷ்பா பவன் காவல் நிலையத்தில் அவரின் மீது பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றியது, பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பித்தலாட்ட பேர்வழி மேத்யூவை நம்பி நாரதாவிற்கு வந்த நாங்கள், ஊதியம் இன்றி நடுத்தெருவில் நிற்கிறோம் என அந்நிறுவன ஊழியர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக புலம்பி வருகின்றனர். மேத்யூ யார் என்ற ஆதாரங்களுடன் விரைவில் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் தராமல் வாரக் கூலிகளைப்போல நடத்தி வந்த மேத்யூ, ஒரு கட்டத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் காரணம் காட்டி ஒரேயடியாக ஊழியர்களுக்கு சம்பளம் தருவதையே நிறுத்தி விட்டதாக கூறுகிறார் மேத்யூவின் நிறுவனத்தில் பணியாற்றி பாதிக்கப்பட்ட டெல்லி பத்திரிகையாளர்.
பரபரப்பான தேர்தல் சூழ்நிலைகளின்போது ஸ்டிங் ஆபரசேன் என்ற பெயரில் போலி ஆவணப்படம் வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவது மேத்யூவின் வழக்கம். அந்த படங்களை பார்த்து தன்னிடம் சரண்டராகும் அதிகாரிகள், அரசியல் தலைவர்களிடத்தில் பேரம் பேசி கணிசமான தொகையை கறப்பதுதான் மேத்யூவின் நோக்கம். அரசியலில் நேர் எதிர் துருவங்களாக இருப்பவர்களை அடையாளம் கண்டு ஒரு தரப்பினர் இடத்தில் பணத்தை பெற்று கொண்டு, அவரின் எதிர் தரப்பினர் மீது ஆவணப்படம் என்ற பெயரில் பொய்ப் பிரசாரம் செய்வது மேத்யூவின் பிரதான தொழில் என்பது அவரின் பின்னணி தெரிந்தவர்களிடம் விசாரித்ததில் கிடைக்கின்ற தகவல்.
வட நாட்டில் வம்பு செய்து வந்த மேத்யூ அங்கு தொழில் டல் ஆனதால், சில சூழ்ச்சிக்காரர்களில் துணையுடன் நல்லாட்சி நடந்து வரும் தமிழகத்தில் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மாண்பை சீர்குலைக்கும் நோக்கிலும் “கோடநாடு மர்மக் கொலை” என்ற பெயரில் புரட்டுக் கதை சொல்லி….தான் ஒரு கோமாளி….சதிகாரர்களின் கைக்கூலி என்பதை நிரூபித்திருக்கிறார்.