நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படும் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட்ட மோடி அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோடியின் செல்வாக்கை கண்டு அந்த எண்ணத்தில் இருந்து பின்வாங்கியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் வாரணாசி தொகுதிக்கு வரும் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி இங்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவு பெற்றது. தற்போது இந்த தொகுதியில் பிரதமரை எதிர்த்து தேஜ் பகதூர் யாதவ் என்ற வேட்பாளர் போட்டியிடுகிறார். யார் இவர் ?
கடந்த 2017 ஆம் ஆண்டு பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் அதன் தரம் குறித்தும் முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் தேஜ் பகதூர் யாதவ். மேலும் பணியில் இருந்தும் நீக்கப்பட்டார். தற்போது வாரணாசி தொகுதியில் போட்டியிடும் தேஜ் பகதூர் யாதவை சமாஜ்வாதி கட்சி தங்களுடைய அதிகாரப்பூர்வ வேட்பாளராக கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.