யார் இந்த ஸ்டேன் சுவாமி? ஏன் இவ்வளவு சலசலப்பு?

ஸ்டேன் சுவாமி மும்பையில் உள்ள சிறையில் இன்று காலமானார். பழங்குடியின மக்களுக்கான தமிழர் போராளியான அவரது இழப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த ஸ்டேன் சுவாமி?

தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் 1937ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பிறந்தவர் ஸ்டேன் சுவாமி. கத்தோலிக்க பாதிரியாராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்படுபவர். கடந்த 50 ஆண்டுகளாக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடி மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்திய ஒரே தமிழர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

அவருக்கும் நக்ஸலைட்டுகளுக்கும், தடை செய்யபட்ட மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, தேசிய புலனாய்வு முகமை அவரை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்தது.
மேலும் ஸ்டேன் சுவாமி ஒரு மாவோயிஸ்ட் எனவும், அவர் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை என்.ஐ.ஏ முன்வைத்தது.

அண்மையில் உடல்நலகுறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று வரையிலும் தனக்கு ஜாமின் வழங்கக் கேட்டு போராடி வந்ததும் கவனிக்கத்தக்கது. ஆனால், அவருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் தேசிய புலனாய்வு முகமை சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டன.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி நடந்த எல்கர் பரிஷத் நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்டேன் சுவாமி வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும். பீமா- கோரேகான் சம்பவம் நிகழ்ந்ததாக கூறி ஸ்டேன் சுவாமியை குற்றப்பத்திரிகையின் 7ஆவது நபராக தொடர்பு படுத்தி கைது செய்தது என்.ஐ.ஏ. என்பது இதில் கவனிக்கத்தக்கது. 

இந்நிலையில், எதிர்பாராத விதமாக இவரது மரண தகவல் வெளியானதும், சமூக வலைதளங்களில் இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர். 

 

Exit mobile version