யார் வந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி – கே.பி.முனுசாமி திட்டவட்டம்

தேசிய கட்சி, மாநில கட்சிகள் யார் வந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றும் ஆட்சியில் பங்கு கிடையாது எனவும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த 50 ஆண்டுகளாக தேசிய கட்சிகளை தமிழ்நாட்டிற்குள் நுழையவிடாமல் திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்து வருவதாக கூறினார். தற்போது, கருங்காலி கூட்டமாக தேசிய கட்சிகள் தமிழ்நாட்டிற்குள் நுழைய பார்க்கிறார்கள் எனவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

தேசிய கட்சியானாலும், மாநிலக் கட்சியானாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும், ஆட்சியில் பங்கு கிடையாது, அது தான் அதிமுகவின் கொள்கை என்றும் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

முன்னதாக உரையாற்றிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நல்லாட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக கூறினார்.

தொடக்க உரையாற்றிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார். உலகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி என்றும், ஊழலில் திளைத்த இயக்கம் தி.மு.க. என்றும் அமைச்சர் விமர்சித்தார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், சாத்தான் வேதம் ஓதுவது போல், அதிமுகவின் நல்லாட்சியை திமுக வேண்டுமென்றே குறை கூறி வருவதாக கூறினார். பஞ்ச பூதங்களையும் வைத்து ஊழல் செய்த திமுகவையும், ஸ்டாலினையும் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் விரட்டி அடிப்போம் எனக் கூறினார்.

தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டத்தின் நிறைவாக மின்துறை அமைச்சர் தங்கமணி நன்றியுரையாற்றினார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டபோதே அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறினார்.

பிரசார பொதுக்கூட்டத்தில், அதிமுக அரசின் சாதனைகளையும், நலத்திட்டங்களையும் பட்டியலிட்டு, அதிமுக மூத்தத் தலைவர்கள் உரையாற்றினார்.

Exit mobile version