கொரோனாவில் இறந்தவர் உடலில் இருந்து வைரஸ் பரவியதால் மற்றொருவர் மரணம்?

தாய்லாந்தில், கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தவர் உடலில் இருந்து வைரஸ் பரவி, மற்றொருவர் இறந்துள்ளார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.`பாங்காக்கில், கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தவர்களின் உடல்களை கையாளும் பணியில் இருந்த தடயவியல் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்துள்ளார் என்றும், இறந்தவர் உடலில் இருந்து வைரஸ் பரவி மற்றொருவர் இறந்தது உலகில் இதுவே முதல் முறை எனவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.தாய்லாந்தில் தடயவியல் ஊழியர்கள் இருவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டபோது, அவர்கள் கொரோனோ பாதித்த நபர்களுடன் நேரடி தொடர்பில் இல்லை என்றும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை மட்டுமே கையாண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், உயிருடன் இருப்பவர்கள் மூலம் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும், இறந்தவர்களின் சடலங்கள் மூலம் மட்டுமே அவர்களுக்கு பரவியிலிருக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தாய்லாந்து நாட்டில் இறந்தவர்களின் உடல்களை கையாளும் போது, தடயவியல் ஊழியர்கள் அலட்சிய போக்கோடு உள்ளனர் எனவும், போதிய பாதுகாப்பு உணர்வோடு செயல்பட வேண்டும் எனவும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா தொற்று எந்தெந்த வகைகளில் பரவுகிறது என்பது தெரியாததால், இறந்தவர்களின் உடல்களை கையாளுபவர்கள், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவைகளும் வலியுறுத்தி வருகின்றன. கொரோனா தொற்று உள்ளவர் தும்மும் போது தெறிக்கும் நீர்த்துளிகள் மூலமாகவே, வைரஸ் பரவுகிறது என பொதுவாக நம்பப்படும் நிலையில், தொற்றுக்கான காரணம் மற்றும் நோய் அதிகரிக்கும் விதம் ஆகியவை பற்றிய முழுமையான தகவல்கள் இல்லை என்றே ஆராய்ச்சியாளர்களும் வல்லுநர்களும் கூறுகின்றனர். அதே சமயம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் உடலில் இருந்து வெளியேறும் திரவங்கள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இறந்தவரின் உடலின் நுரையீரல், வைரஸ் தொற்றை ஏற்படுத்தும் என்பதால், பிரேத பரிசோதனை செய்யும் போது சரியாக கையாளவில்லை என்றால் ஆபத்து என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.

கொரோனாவை போன்ற மற்றொரு வைரஸான எபோலா, இறந்தவர்களின் உடலில் உள்ள ரத்தம் அல்லது திரவங்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவும் என அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள் தெரிவிப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. இறந்தவர்களின் உடலில் வைரஸ் கிருமிகள் நீண்ட நேரத்திற்கு உயிர் வாழாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், பாங்காக்கில் உயிரிழந்தவருக்கு சடலங்கள் மூலமாகத்தான் வைரஸ் தொற்று ஏற்பட்டதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் முழுமையாக உறுதிப்படுத்தாதும், சற்று நிம்மதியை தருகிறது.  எனினும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை விரைவில் அடக்கமோ, தகனமோ செய்துவிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version