ஐஎஸ்ஐஎஸ் என்னும் மூடர்களின் கூடாரம்

ஐஎஸ்ஐஎஸ் என்றால் யார்..? அவர்களின் செயல்பாடுகள் என்ன? 

ஐஎஸ்ஐஎஸ்… இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா என்று தான் அல்கொய்தாவின் கிளையாக இது முதலில் துவங்கியது. ஆனால் அகண்ட இஸ்லாமிய தேசம் என்று தன் சித்தாந்தத்தை மாற்றிக் கொண்டது முதல் இதன் தாக்குதல்கள் நெஞ்சை பதறச் செய்கின்றன. 2013ஆம் ஆண்டில் தனது முதல் தாக்குதலை ஈராக்கில் நிகழ்த்தியது…

ஆரம்பத்தில் உள்நாட்டு போர் என்று தான் பரவலாக பேசப்பட்டுவந்தது… ஆனால் 2014 மே 24ஆம் தேதி பெல்ஜியம் நாட்டின் ப்ரஸ்ஸெல்ஸ் ((Brussels)) நகரில் உள்ள Jewish Museum of Belgium-மில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 அப்பாவிகள் உயிரிழந்தபிறகு தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அபாயத்தை உலகம் உணர துவங்கியது…

இதனையடுத்து ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், சவுதி அரேபியா, லிபியா, டென்மார்க் உள்ளிட்ட 34 நாடுகளில் தாக்குதல்களை நிகழ்த்தி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்திருக்கிறது அந்த அமைப்பு… தற்போது 35வது நாடாக இலங்கையும் பட்டியலில் இணைந்திருக்கிறது… உலகம் முழுவதும் கிலாஃபத் என்னும் இஸ்லாமிய ராஜ்ஜியத்தை அமைக்கபோவதாக கூறிக்கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, உலக அமைதியை விரும்பாத மூடர்களின் கூடாரம் என்பதற்கு அவர்களின் தாக்குதல் பட்டியல் சான்று பகர்கிறது…

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இயங்கிய 2014-15 காலக்கட்டத்தில் அங்கு மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கொஞ்சமும் சிந்திக்கவில்லை… மாறாக இரத்த வெறிபிடித்து கண்ணில் தென்பட்ட நாடுகளின் மீதெல்லாம் தாக்குதல்களை தொடுத்தது… தனது ஆதிக்கத்தின் கீழிருந்த பகுதிகளிலிருந்து கிடைத்த கச்சா எண்ணெயை கள்ளச்சந்தையில் விற்றும், மக்களின் மீது அளவுக்கு அதிகமான வரிகளை விதித்தும், கஜானாவை நிரப்பியது ஐஎஸ்ஐஎஸ்… செல்வந்தர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டும் லோக்கல் வேலைகளையும் செய்ய தவறவில்லை… அதேபோல் பெண்களை பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்துகின்றனர்… இந்த தகவலை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் இருந்து தப்பிவந்த நாடியா முராட் உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டினார்..

இஸ்லாமிய மதத்தின் அடிப்படையை முழுமையாக அறியாத இளைஞர்களின் மூளையை சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் தங்களுடன் இணைத்துக்கொள்வதாக அமெரிக்க ஆய்வாளர் மைக்கேல் வெய்ஸ் தெரிவிக்கிறார்… இதன் மூலம் உண்மையை மறைத்து தாங்கள் நினைப்பதை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் சாதித்துக்கொள்ள முயல்கின்றனர்…

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அட்டூழியத்தை ஒடுக்கும் விதமாக அமெரிக்கா தலைமையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஜோர்டான், மொரோக்கோ, நெதர்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளின் ராணுவத்தை உள்ளடக்கிய கூட்டுப்படை உருவாக்கப்பட்டது… 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, இந்த கூட்டுப்படை ஈராக்கிய ராணுவத்துடன் இணைந்து ஐஎஸ் பயங்கரவாதிகளின் அமரியா, அல்-ஃபல்லுஜா நகர் முகாம் மீது போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து அழித்தது… உலக நாடுகளின் கூட்டு முயற்சியால் தனது நிலப்பரப்பை மெல்ல மெல்ல ஐஎஸ்ஐஎஸ் இழந்துவிட்டது… ஆனாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆங்காங்கே தனது கோர முகத்தை காட்ட தவறியதுமில்லை…. 2015ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி எகிப்திலிருந்து புறப்பட்ட மெட்ரோஜெட் விமானத்தை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்கியதில் 224 பேர் உயிரிழந்தனர்… அதன் பிறகு தற்போது இலங்கையில் மிக கொடிய தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறது இந்த கொடூர அமைப்பு…

Exit mobile version