கொரோனா வைரஸிலிருந்து காத்துக்கொள்ள மூன்றடுக்குள்ள துணியாலான முகக்கவசத்தை பயண்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது முக்கியம் என உலக சுகாதார அமைப்பு துவக்கத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறது. கொரோனா நோயாளிகளை கையாள்பவர்கள், நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் இருப்பவர்கள் N-95 முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேநேரத்தில் நோய்த்தொற்று ஏற்படாதவர்களும், நோயாளிகளுக்கு அருகில் இல்லாதவர்களும் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயமில்லை எனக் குறிப்பிடப்பட்டது. இப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழலில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென WHO தெரிவித்துள்ளது. அந்த வகையில் துணியில் செய்யப்பட்ட மூன்றடுக்கு முகக் கவசத்தை பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் டெட்ராஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
முதல் அடுக்கு பருத்தி போன்ற துணியாலும், இரண்டாம் அடுக்கு பாலி புரோப்பலைன் போன்ற நெய்யாத துணி வகையிலும் மூன்றாவது அடுக்கு உறிஞ்சும் தன்மையில்லாத பாலிஸ்டர் வகையைச் சார்ந்த துணியாகவும் இருக்க வேண்டும் எனவும், இந்த வகை முகக்கவசங்களை வீட்டிலேயே செய்து உபயோகிக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். மேலும், பட்டு மற்றும் போரஸ் வகைத் துணிகளைப் முகக் கவசங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.