அதிக செலவு செய்யும் நிறுவனங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறதா?

அதிக செலவுசெய்து ரகசிய பரப்புரை மேற்கொள்ளும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கே அதிக ஆஸ்கர் விருதுகள் கிடைக்கின்றன – என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது.

  இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில், கடந்த ஆண்டில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்த ஐரிஷ் மேன், மேரேஜ் ஸ்டோரி, தி டூ போப்ஸ் – ஆகிய மூன்று திரைப்படங்கள் மொத்தம் 24 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் மிக அதிக ஆஸ்கர் பரிந்துரைகளுக்கு உள்ளான படங்களைத் தயாரித்த நிறுவனம் என்ற பெருமையை நெட்பிளிக்ஸ் பெற்று உள்ளது.
 
நிறுவனம் தொடங்கிய குறுகிய காலத்தில் பெற்ற பெரிய வெற்றி என்று இதனை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கொண்டாடிவரும் நிலையில், தனது திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருதுகளைப் பெறுவதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி ரூபாயை செலவழித்து, ரகசியமாகப் பரப்புரைகளை மேற்கொண்டதாக அமெரிக்காவின் பிரபல பொருளாதார இதழான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ – செய்தி வெளியிட்டு உள்ளது. இது திரைப்பட உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இதனால் ஆஸ்கர் விருதுகள் விற்பனைக்கா? – என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்துள்ளது. சினிமாவுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்பட்டாலும், அடிப்படையில் ஆஸ்கர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள சில ஆயிரம் பேரால் முடிவு செய்யப்படும் விருதாகவே அது  உள்ளது. அயல்நாடுகள் பிரிவு, சிறப்புப் பிரிவு – ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் படங்களைத் தவிர, பிற பிரிவுகளில் பரிந்துரைக்கப்படும் படங்கள் அனைத்தும் லாஸ் ஏஞ்சலீசில் உள்ள திரையரங்கில் ஒரு வாரமாவது ஓடி இருக்க வேண்டும் – என்பது ஆஸ்கர் தேர்வுக் குழுவின் பிரதான விதிகளில் ஒன்று.
 
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் – என்ற அமைப்பில் உள்ள திரைத்துறையைச் சார்ந்த சுமார் 7 ஆயிரம்  உறுப்பினர்களின் வாக்குகள் மூலமே ஆஸ்கர் விருதுகள் அளிக்கப்படுகின்றன. இவர்களே பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறும் படங்களையும், விருது வெல்லும் படங்களையும் தீர்மானிக்கிறார்கள். அப்போது மக்களும் ஊடகங்களும் எந்தத் திரைப்படங்களைப் பற்றி அதிகம் பேசுகிறார்களோ அவற்றுக்கே இவர்கள் வாக்களிக்கவும் வாய்ப்பு உள்ளது.
 
அல்லது திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களே அகாடமியின் உறுப்பினர்களுக்காக தங்கள் படங்களை சிறப்புக் காட்சிகளாக திரையிட்டுக் காட்டலாம் – என விதி உள்ளது. ஆனால் இந்த சிறப்புக் காட்சிகளின் போது அகாடமியின் உறுப்பினர்களுக்கு பரிசுகளையோ பணத்தையோ திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் வழங்கக் கூடாது – என்றும் அந்த விதி சொல்கிறது. ஆனால் சிறப்புக் காட்சியின் போது  பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு
நெடுங்காலமாக இருக்கின்றது.
 
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் மீது வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ள இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு ஆஸ்கர் விருதுகள் மீதான பொதுமக்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்களின் நம்பிக்கையை சிதைப்பதாக உள்ளது. வரும் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்குப் பின்னர் இந்தக் குற்றச்சாட்டால் இன்னும் பெரிய சர்ச்சைகள் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Exit mobile version