டாக்ஸிக் மதன் என்ற பொறுப்புத்துறப்புடன், துளியும் பொறுப்பற்று பொறிக்கித்தனம் செய்து வந்த யூட்யூபர் மதன் தான் இன்று சமூக வலைதளங்களில் பேசுபொருள். சமூகத்தில், போலிசாரின் தேடுபொருள். இளம்பெண்களை பொதுவெளியில் ஆபாசமாகப் பேசியது, பொய்யான நிதி திரட்டல் மூலம் சொகுசு வாழ்க்கை நடத்தியது என நீண்டுகொண்டே போகிறது மதன் மீதான குற்றப்பட்டியல்.
குற்றங்களைச் செய்துவிட்டு குற்றவாளிகள் தலைமறைவாவது ஒன்றும் நமக்குப் புதிதல்ல. ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் தொழில்நுட்ப உதவியுடன் கண்னாமூச்சி விளையாடியபடி தலைமறைவாக இருப்பது அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலில் இருப்பவர், இல்லாத கைலாசாவின் எல்லாம் வல்ல அதிபரான நித்தியானந்தா. இன்னொருவர், பப்ஜி கேம் மூலம் வள்ளலாக வாய்ஜம்பம் காட்டி கோடிக்கணக்கில் வாரிச்சுருட்டிய, கெட்டவார்த்தை மெஷினான பப்ஜி மதன்.
இருவருமே தற்போது தேடப்படும் குற்றவாளிகள் இருவருமே இப்போது இருக்குமிடம் தெரியவில்லை. ஆனால், இருவருமே எங்கோ இருந்தபடி தொழில்நுட்ப உதவியுடன் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
நான் ஒருவேளை கைது செய்யப்பட்டால், திரும்பி வந்து என் ஆட்டம் பயங்கரமாக இருக்கும் என்று தலைமறைவாக இருந்தபடியே வீடியோ வெளியிடுகிறார் மதன். தான் இருக்குமிடம் கைலாசா என்று அறிவித்தாலும் கண்டுபிடிக்கமுடியாதபடி தலைமறைவாகத்தான் இருக்கிறார் நித்தியானந்தா.
என்னதான் தொழில்நுட்பம் அவர்களிடம் இருக்கிறது? VPN சர்வர்களின் Accessing Gadget location கண்டுபிடிக்கும் அளவுக்குக் கூட அரசிடம் தொழில்நுட்ப வசதி இல்லையா?
அப்படி என்றால், அடுத்தடுத்தும் இதே பாணியில் குற்றங்களைச் செய்பவர்கள் தலைமறைவாகி தப்ப முயன்றால், எங்களிடம் தொழில்நுட்பம் இல்லை என்று கைவிரிக்குமா அரசு?
நாளை மதன் கைது செய்யப்படலாம் அல்லது தேடப்பட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனால், மதன் கிடைத்ததும் இந்தப் பிரச்சினைக்கு முழுக்குப் போடாமல், அடுத்து இதுபோன்ற தலைமறைவுகளைக் கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பத்துக்கு காவல்துறை தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்பதுதான் இந்த நேரத்தின் தேவை.