சொகுசு கார்லாம் இல்லைங்க; வெறும் ஆடி கார் தான் இருக்கு – பப்ஜி மதன் மனைவி கிருத்திகா வேதனை பேட்டி

எங்களுடைய யூடியூப் சேனலை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். இதனால் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக் கொண்டே விளையாடி அதனை யூடியூபிலும் வீடியோவாக வெளியிட்ட மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனிடையே ஜாமினில் வந்துள்ள அவரது மனைவி கிருத்திகா சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கைது செய்யப்பட்ட தனது கணவர் மதன் மீது எதிர்மறையான கருத்துகள் பரவி வருகிறது. அதனை விளக்கவே செய்தியாளர்களை சந்திக்க வந்துள்ளேன். தனது கணவர் மதன் தடை செய்யப்பட்ட விளையாட்டான பப்ஜியை விளையாடியதாக கூறி வருவது முற்றிலும் தவறு. இந்தியாவில் சீன வெர்ஷன் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. எனது கணவர் விளையாடியது கொரியன் வெர்ஷன். இதனை தவறாக சொல்லவது எப்படி? மதன் மீது 159 வழக்குகள் வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது முற்றிலும் தவறு. பல இடங்களில் 4 நபர்கள் மட்டுமே மதன் மீது புகார் அளித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக மதன் எந்த விதமான சொகுசு பங்களாக்களும் வாங்கவில்லை. 2 சொகுசு பங்களா மதன் வாங்கியதாக கூறுவதும் தவறு. ஆடி ஏ6 கார் மட்டுமே மதனிடம் இருக்கிறது. வீட்டு வாசலில் கார் நின்றிருந்தால் அது எங்களுடைய கார் ஆகுமா? தாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். எனது கணவர் மதன் ஒரு நாளில் 20 மணி நேரமாக பப்ஜி விளையாடி உழைத்து வீடியோ வெளியிட்டதன் மூலமாகவே பணத்தை சம்பாதித்துள்ளார். என்னுடைய வங்கி கணக்கை தான் மதன் பயன்படுத்தி வந்துள்ளார். அதனை போலீசார் முடக்கம் செய்து விட்டனர். வீட்டின் சாவி போலீசார் கைப்பற்றி வைத்துள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மதன் யூடியூப் சேனலோடு தனது வங்கி கணக்கை இணைத்துள்ளதால் மட்டுமே தன்னை போலீசார் கைது செய்தனர். மதனின் யூடியூப் சேனலில் ஒரு முறை கூட தான் பேசியதில்லை. அதற்கு எந்த ஒரு ஆதாரமும் இன்றி போலீசார் தன்னை கைது செய்தனர். இதன் காரணமாகவே தனக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. இதுவரை தனது கணவர் மதன் யாரிடமும் பணம் வாங்கி ஏமாற்றவில்லை. அதற்கான ஆதாரம் இருந்தால் போலீசார் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். யூடியூப் சேனலில் தனது கணவர் பப்ஜி விளையாடி ஒளிப்பரப்பும் போது அந்த வீடியோ கமெண்டில் 4 நபர்களின் தூண்டுதலின் பேரிலேயே மதன் ஆபாசமாக பேசியதாகவும், பல வீடியோக்களில் மதன் ஆபாசமாக பேசியது போல் சித்தரித்து வெளியாகி உள்ளது. மதன் யூடியூப்பில் வீடியோவை பதிவிட்டதன் மூலமாக சம்பாதித்த பணத்தை மட்டுமே பயன்படுத்தி வந்தார்.

மதன் மீது கொடுக்கப்பட்டுள்ள 159 புகார்கள் குறித்த விவரங்களை காவல் ஆணையரிடம் கேட்க வந்த போது தனது கணவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்தது. 4 புகார்களை வைத்து குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது எப்படி? என்பது எனக்கு புரியவில்லை” என்று பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா கூறினார்.

மதன் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு கிருத்திகா பதல் அளிக்கவில்லை. தவறு செய்யாவிட்டால் ஏன் தலைமறைவானார்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு கிருத்திகா பதில் அளிக்காமலேயே பேட்டியை பாதியிலேயே முடித்து கொண்டு சென்று விட்டார். ஜாமீன் பெற்று விட்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருக்கும் போது கிருத்திகா ஊடகங்களை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version