கொரோனா வைரஸ் எங்கு உருவானது என்பதை ஆய்வு செய்வதற்கு, உலக சுகாதார நிறுவனத்தின் குழு அடுத்த வாரம் சீனா செல்ல உள்ளது.
சுகாதார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கொரோனா வைரஸ் பரவல் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் வூகான் நகரில் இருந்துதான் முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது என கருதப்படுகிறது. ஆனால் இது பற்றி சீனா முன்கூட்டியே உலக நாடுகளுக்கு எச்சரிக்கை செய்யவில்லை என்று அந்நாட்டின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா அரசு முதற்கட்ட தகவலை தெரிவிக்கவில்லை என்றும், சீனாவில் உள்ள WHO குழு தான் கொரோனா பற்றி தகவல் அளித்தது என்றும் WHO தலைவர் தற்போது தெரிவித்துள்ளார். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு குழு அடுத்த வாரம் சீனா சென்று இதுதொடர்பாக ஆய்வு செய்ய உள்ளது. இந்த ஆய்வின் போது, வவ்வால்களிடம் இருந்து நேரடியாக மனிதர்களுக்கு தொற்று பரவியதா என்பது ஆராயப்படும் என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அதே போன்று வவ்வால்களிடம் இருந்து வேறு உயிரினத்திற்கு பரவி அதன் பிறகு மனிதர்களுக்கு பரவியதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.