மியான்மர் பாம்புத் தீவிலிருந்து எப்போது எங்களுக்கு விடுதலை!

Kyun Pila என்ற அந்த தீவு மியான்மரின் தென்பகுதியில் உள்ளது. அங்குள்ள பவளப்பாறைகளை பாதுகாக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த பணியில் கலந்துகொள்ள இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 35 வயதான நடாலியா பூல் என்பவரும் மியான்மர் தீவுக்கு சென்றிருந்தார்.

ஆழ்கடல் நீச்சல் பயிற்சி ஆசிரியரான இவர், சில காலம் தாய்லாந்தில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், மார்ச் 19ம் தேதி மியான்மர் தீவுக்கு சென்ற அவர், பவளப்பாறைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட தொடங்கினார்.

அந்த சமயத்தில் கொரோனா வைரஸின் பரவல் அதிகமாகவே, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க தொடங்கின. அதன் ஒருபகுதியாக மியான்மரிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால், நடாலியா உட்பட 5 பேரும் மியான்மர் தீவை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே அவர்கள் தங்கள் கைவசம் இருந்த பொருட்களைக் கொண்டும், தீவுப்பகுதியில் கிடைத்த பொருட்களைக் கொண்டும் தங்களுக்கான தங்குமிடத்தை அமைத்துக்கொண்டனர்.

தீவில் தாங்கள் சிக்கிக்கொண்டுள்ளது குறித்து நடாலியா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். “நாங்கள் மிகவும் மோசமான நிலையில் உயிர் பிழைத்து வருகிறோம். இன்னும் எத்தனை நாட்கள் இந்த தீவில் நாங்கள் இருக்க வேண்டி வரும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. குடும்பத்தை பற்றி நினைக்கும்போது மேலும் பதட்டம் அதிகமாகிறது. உணவும் போதியளவு இல்லை. ஆகவே மிகக்குறைவான அளவு உணவையே நாங்கள் உட்கொண்டு வருகிறோம்” என நடாலியா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தீவுப்பகுதியில் அதிகளவில் உள்ள பாம்புகள், காட்டுப்பன்றிகள், பெரிய அளவிலான பல்லிகள் ஆகியவற்றின் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

நடாலியாவின் இந்த பதிவு உலக அளவில் அதிக கவனம் பெற்று வருகிறது. இதன் காரணமாக, இன்னும் சில நாட்களில் நடாலியா உட்பட ஐந்து பேரும் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version