புயல் கரையை கடக்கும்போது 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

ஃபானி புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் ஒடிசா மாநில அரசு உஷார் நிலையில் உள்ளது. மேற்கு வங்கம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கும் ஆரஞ் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதி தீவிர புயலாக உருவெடுத்திருக்கும் ஃபானி புயல், நாளை ஒடிசா மாநிலம் கோபல்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையை கடக்கிறது. தற்போது புரியிலிருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைக்கொண்டிருக்கும் ஃபானி புயல், கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வட ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அருணாச்சலம், அசாம் மற்றும் மேகலாயா ஆகிய மாநிலங்களில் இன்று முதல் மழை பெய்ய ஆரம்பிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு கடலோர காவல் படை மூலம் எச்சரித்துள்ளனர். அதேசமயம் 41 மீட்பு குழுக்கள் தயார்நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்திருக்கும் நிலையில், கடலில் எண்ணெய் எடுக்கும் வலையத்திலிருந்து 480 ஊழியர்களை ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற்றியுள்ளது. மேலும் ஒடிசா மாநிலத்தில் கஞ்சம், கஜாபதி, குர்தா, புரி, ஜகட்சிங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் இருக்கும் என கணித்திருப்பதால், அங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Exit mobile version