மஹாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எப்போது நடத்துவது என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
அணமையில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதனால் மஹாராஷ்டிராவில் யார் முதலமைச்சர் பதவி வகிப்பது என்பதில் தொடர் இழுபறி நீடித்தது.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாருடன் கூட்டணி வைத்து, ஆட்சி அமைத்தது பாஜக. அதனடிப்படையில் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இதனை அடுத்து தேசியவாத காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்தார். இத்தகைய அரசியல் குழப்பத்தில், சிவசேனா தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் வழக்கை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் தேவேந்திர பட்னாவிஸ் அரசு அமைய ஆளுநர் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், சட்டசபையை கூட்டி தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை அவசர வழக்காக ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு குடியரசு தலைவரின் ஆட்சியை ரத்து செய்யுமாறு பரிந்துரை செய்து, ஆளுநர் எழுதிய கடிதத்தையும், தேவேந்திர பட்னாவிஸ் புதிய அரசு அமைக்க ஆளுனர் அழைப்பு விடுத்த கடிதத்தையும் இன்று 10.30 மணிக்கு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.