தாயகம் திரும்புவது எப்போது?

 

கொரோனா அச்சுறுத்தலால், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப கேரளாவைச் சேர்ந்த 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 61ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வேலைகளை இழந்துள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ். எப்போது தீர்வு கிடைக்கும் என தவிக்கும் மக்கள்… இந்தியாவுக்குள்ளேயே வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் நிலையில், அமெரிக்கா, ரஷ்யா, கனடா, துபாய் போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியா திரும்புவதற்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் காத்துக்கிடக்கின்றனர். பல்வேறு நாடுகளில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். துபாயில் உள்ள இந்திய துணை தூதர் விபுல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஐக்கிய அரபு நாடுகளான துபாய், அபுதாபி ஆகிய நாடுகளில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அவர்களில் ஒன்றரை லட்சம் பேர் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார். அதில் மூன்றில் ஒரு பங்கினர் வேலை இழந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களும் தாயகம் திரும்ப பதிவு செய்துள்ள நிலையில், 50 சதவீதம் விண்ணப்பதாரர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது. தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளவர்களுக்கான விமான டிக்கெட் விலை மற்றும் கொரோனா பரிசோதனை குறித்த பணிகள் எதுவும் இந்திய அரசங்கத்தின் தரப்பில் இருந்து துவங்கப்படவில்லை என்று இந்திய துணை தூதர் விபுல் தெரிவித்துள்ளார். இந்தியர்கள் தாயகம் திரும்புவது தொடர்பாக உயர்மட்ட குழு ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், அதுவரை தாயகம் திரும்ப முன் பதிவு திறந்திருக்கும் என்றும் இந்திய துணை தூதர் விபுல் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version