விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தனது அடுத்தப் படத்திற்கு தயாராகி விட்டார். தீரன் பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் பாலிவுட்டில் வெற்றிப்படமான “பிங்க்”-ன் ரீமேக்கில் தான் தற்போது அவர் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 30 சதவிகித காட்சிகள் நிறைவுற்ற நிலையில், தற்போது தான் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்த நிலையில் படமானது அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியானது. ஒரே ஆண்டில் அடுத்தடுத்து அஜித்தின் படம் வெளியாக உள்ளது என்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.
ஆனால் அஜித்தோ மே 1ம் தேதி படத்தை வெளியிட வேண்டும் என்பதால் அவசர அவசரமாக படமாக்க வேண்டாம் எனவும், இந்த படம் தரமானதாகவும், சிறப்பானதாவும் இருக்க வேண்டும் என்பதால் மெதுவாகவே படமாக்க கேட்டுக் கொண்டதாவும் கூறப்பட்டுள்ளது. அஜித்தே தானாக முன்வந்து இதனை கேட்டுக்கொண்டதால் இந்த படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என தெரிகிறது.