இந்தியாவில் மிக விரைவில் அறிமுகமாகவுள்ள “வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை”

இன்றைய நவீன உலகில் வாட்ஸ்அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட் போனும் இல்லை. அதை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவையினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது வாட்ஸ்அப்.

வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவை இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் ஒப்புதலுக்காக இந்திய ரிசர்வ் வங்கியை (RBI) அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, வாட்ஸ்அப் பேமெண்ட் சேவைக்கான வணிக ரீதியான ஒப்பந்த தொடக்க ஒழுங்குமுறை அனுமதிகளை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்க வாட்ஸ்அப் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், தற்பொழுது ஒப்பந்தம் இறுதி கட்ட பணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்துதல் தொடர்பான தரவுகளுக்கு, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த தரவு விதிமுறைகளை வாட்ஸ் ஆப் ஒப்புக் கொண்டதையடுத்து தணிக்கை நடத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, iOS மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் பீட்டா வெர்ஷனில் இந்த பணம் செலுத்தும் சேவையை வாட்ஸ் ஆப் சோதித்து வருகிறது.

இந்தியாவில், வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை UPI அடிப்படையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. UPI சேவையின் மூலம் பண பரிவர்த்தனைகளை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு நேரடியாக வாட்ஸ்அப் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

வாட்ஸ் ஆப் தற்பொழுது சோதனை செய்துவரும் பீட்டா வெர்ஷனில், வாட்ஸ்அப் பேமெண்ட் சேவையை பயன்படுத்தி எந்தவொரு UPI கணக்கிற்கும் பணம் செலுத்தலாம். அதேபோல் QR ஸ்கேனிங் மூலம் பணம் செலுத்தவும், பணம் பெறுவதற்கான சேவையுடன் பல புதிய சேவைகைளை அறிமுகம் செய்துள்ளது.

பயனர்களின் விபரங்கள் எவ்வாறு சேமிக்கப்படும் மற்றும் பிற சிக்கல்கள் குறித்து இந்திய அரசாங்கத்தின் தனியுரிமை கேள்விகளின் காரணமாக வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவை கடந்த ஆண்டு, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவது தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட், ஆக்சிஸ் வங்கி லிமிடெட் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளுடன் வாட்ஸ் ஆப் நிறுவனம் கைகோர்க்கும் என்பது உறுதியாகியுள்ளது.வாட்ஸ் ஆப் செயலியை இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேமெண்ட் சேவையை வாட்ஸ் ஆப் துவங்கினால் Google Pay, Paytm மற்றும் PhonePe போன்ற நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Exit mobile version