இந்தியாவில் 40 கோடி பேர் வாட்ஸப் பயன்படுத்துகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 100% வளர்ந்த வாட்ஸப்பின் வளர்ச்சி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்
இணைய சேவை நிறுவனமான யாஹூ-வில் இருந்து வெளியேறிய பிரையன் ஆக்டன், ஜேன் கோம் என்ற இரு ஊழியர்கள், அதன் பிறகு வேலைக்காக பேஸ் புக் நிறுவனத்தில் விண்ணப்பித்தார்கள், அங்கும் அவர்களுக்கு வேலை கிடைக்காத நிலையில் அவர்களே யோசித்து, 55 பேரின் உழைப்போடு உருவாக்கிய கைபேசி செயலிதான் ‘வாட்ஸப்’ஸ்மார்ட் போன்களில் இயங்கும் செய்திப் பரிமாற்ற செயலியான இது 10 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2009ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக சந்தைக்கு வந்தது. அப்போது ஸ்மார்ட் போன்களின் விலைகள் ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் இருந்ததால் வாட்ஸப்பின் வளர்ச்சி ஆமை வேகத்தில்தான் இருந்தது. பின்னர் ஸ்மார்ட் போன்களின் பெருக்கத்தால் 2013ஆம் ஆண்டில் உலகெங்கும் 20 கோடி பயனாளர்களை வாட்ஸப் பெற்றது. இதனால் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸப் செயலியை ஆயிரத்து 900 கோடி அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கி, இன்னும் வலிமைப்படுத்தியது.
கடந்த 2017ஆம் ஆண்டில் 20 கோடி இந்தியர்கள் வாட்ஸப் பயன்படுத்துவதாக தெரிவித்த அந்நிறுவனம், இப்போது இந்தியாவில் 40 கோடி மாதாந்திர பயனாளர்கள் உள்ளதாக அறிவித்து உள்ளது. அதாவது 2 ஆண்டுகளில் அதன் இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 100% வளர்ந்து உள்ளது!. இந்த 40 கோடி இந்தியர்களையும் சேர்த்து, உலகெங்கும் உள்ள வாட்ஸப் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 150 கோடியாக உள்ளது.
தற்போது இந்தியாவில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துகின்றனர், இவர்களில் பெரும்பாலானோரின் முக்கியத் தேர்வாக வாட்ஸப் உள்ளது. மேலும் இந்தியாவின் நிதி ஆயோக் அமைப்பு ’அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டும்’ – என்று கணித்துள்ள நிலையில், வருங்காலங்களில் வாட்ஸப் பயனாளிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.
பாதுகாப்புப் பிரச்னைகள், வதந்திகள் – ஆகியவற்றால் சமீபத்தில் பெரும் சர்ச்சைகளை சந்தித்த வாட்ஸப் நிறுவனம் சமீப காலங்களில் தனது பல்வேறு நடவடிக்கைகளை மாற்றி உள்ளது. வெளிப்படைத் தன்மையை அதிகரித்ததோடு மத்திய அரசின்
நிதி ஆயோக்குடன் இணைந்து பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவும் திட்டத்தையும் அது வெளியிட்டு உள்ளது.
இன்னொரு பக்கம் கூகுள் பே, பே-டிஎம் போன்ற பணப் பரிமாற்ற செயலிகளுக்கு மாற்றாக, ‘வாட்ஸப்-பே’ என்ற பணப் பரிமாற்ற செயலியை வெளியிடுவது குறித்த அறிவிப்பையும் வாட்ஸப் வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் இந்திய ஸ்மார்ட்போன்
சந்தை மட்டுமின்றி இந்தியாவின் வர்த்தக சந்தையிலும் வாட்ஸப் வலுவாகக் கால்பதித்து உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.