நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும்?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு, எந்த தருணத்தில் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது,

நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த கூடுதல் தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்

ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும், நாசி துவாரத்தின் வழியே நுரையீரலுக்கு செல்லும் காற்றிலிருந்து, ஆக்சிஜன் பிரித்து எடுக்கப்படுகிறது.

நுரையீரலின் காற்றுப்பை ரத்த நாளங்களில் காணப்படும் ஹீமோகுளோபின், உள்ளே வரும் காற்றிலிருந்து ஆக்சிஜனை மட்டும் தனியாக பிரித்து ரத்தத்தில் கலந்து விடுகிறது.

சாதாரணமாக ஒரு மனிதன், தினமும் 550 லிட்டர் ஆக்சிஜனை நுரையீரல் வழியாக எடுத்துக் கொள்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மனிதனின் நுரையீரலுக்குள் நுழையும் வைரஸ், நுரையீரல் புரதங்களில் தொற்றிக் கொண்டு பல்கிப் பெருக ஆரம்பிக்கிறது.

இதனால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்ட செல்களை அழித்து விடுவதால், நுரையீரலில் நீர்கோர்த்து சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும்.

கிருமித் தொற்று முற்றி நுரையீரலின் ஒரு பகுதியை வைரஸ் அழிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படும். இத்தகைய சூழலில் ஒரு மனிதனுக்கு செயற்கை ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு வழங்கப்படும் மருத்துவ ஆக்சிஜன் 99-100% சதவீதம் தூய்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு 5 PPM க்கும் குறைவாகவும், கார்பன்டை ஆக்ஸ்சைடு 300 PPM-க்கு குறைவாகவும் இருக்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல வளிமண்டலத்தில் இருக்கும் ஹாலஜன்கள் போன்ற வேதிப்பொருள்கள் அறவே இருக்கக் கூடாது என்பதுடன் பாக்டீரியா போன்றவை வளர உதவும் ஈரப்பதம் அற்று, முற்றிலும் உலர்ந்து இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்

எனினும் உலர்ந்த நிலையில் சிலிண்டரில் உள்ள மருத்துவ ஆக்சிஜனை அப்படியே நோயாளிக்கு தர முடியாது என்பதால், ஈரப்பதமேற்றிய பிறகு மருத்துவ ஆக்சிஜனானது நோயாளிக்கு அளிக்கப்படுகிறது

தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஒரு நோயாளிக்கு ஒவ்வொரு நிமிடமும் சுமார் 24 லிட்டர் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படும்.

அதே சமயம் வெண்டிலேட்டர் பொருத்தப்படாத ஒரு நோயாளிக்கு, நிமிடத்துக்கு சுமார் ஒரு லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version