வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான மே 1ம் தேதி அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா இரண்டாவது பரவல் தீவிரமாகி வருவதை அடுத்து, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், ரெம்டெசிவர், தடுப்பூசி மருந்து பற்றாக்குறை நிலவி வருவதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், மே 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு பரிந்துரைத்திருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், வாக்கு எண்ணிக்கை குறித்து தேர்தல் ஆணையமும், அரசும் ஆலோசித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், கொரோனா பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து பத்திரிகைகளில் விரிவான விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வாக்கு எண்ணிக்கைக்கு பின் அரசியல் கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க, 48 மணி நேரத்துக்கு முன் கொரோனா சோதனை செய்திருக்க வேண்டும் அல்லது இரு தவணை தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல் அதிகாரிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில், கிருமி நாசினி பயன்படுத்துவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விவரித்தார்.
வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 2 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளதாகவும், முந்தைய நாளான மே 1ம் தேதியைப் பொறுத்தவரை, அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படாது… அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருக்காது என்பதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், மே 1ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாம் துவங்க உள்ளதால் அதை தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஊடகத்தினருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, கொரோனா பரிசோதனை செய்த அல்லது தடுப்பூசி போட்ட ஊடகத்தினருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் எனவும், இதுபற்றிய முழு விவரங்களை நாளை தெரிவிப்பதாகவும் தலைமை வழக்கறிஞர் கூறினார்.
இதை ஏற்று வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூட வேண்டாம் எனவும், கொண்டாட்டங்களிலும், ஊர்வலங்களிலும் ஈடுபட வேண்டாம் என அரசியல் கட்சியினரை கேட்டுக் கொண்டனர்.
மே 1ம் தேதி ஊரடங்கு அறிவிப்பது குறித்து யோசனை தெரிவித்ததாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றனர்.
மேலும், ரெம்டெசிவிர், படுக்கை, வெண்டிலேட்டர், ஆக்சிஜன் இருப்பு குறித்தும், மாநில எல்லையில் தடுப்புகள் அமைப்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜராகியிருந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், தடுப்பூசி தயாரிப்பின் அளவை அதிகப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தியை தொடங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பிற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் வினியோகிக்கும் கவுண்டரில் மக்கள் குவிந்து வருவதால் மாநில முழுவதும் அதற்கான கவுண்டர்கள் துவங்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் பிரசாத் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
அதே போல,
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் நபர்களை கண்காணிக்க ஏதேனும் நடை முறைகள் பின்பற்றப்பட உள்ளதா என்பது தொடர்பாகவும் விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்