ராட்வெலர் நாய் வகை பல நாடுகள் தடை விதிக்கக் காரணம் என்ன?

ஆவடி அருகே ராட்வீலர் வகை நாய் கடித்ததில் 9 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ராட்வெலர் நாய் வகை பல நாடுகள் தடை விதிக்கக் காரணம் என்ன? சென்னை ஆவடி அடுத்த மோரை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது 9 வயது மகனான விஷ்ணு, வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது, குமார் என்பவருக்கு சொந்தமான ராட்வெலர் ரக நாய் ஒன்று, திடீரென சிறுவன் விஷ்ணு மீது பாய்ந்து தாக்க தொடங்கியது. சிறுவனின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளை நாய் கடித்துக் குதறியது. பலத்த காயமடைந்த சிறுவனை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் விஷ்ணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுவனை காயப்படுத்திய ராட்வெலர் வகை நாய் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு ரகமாக பார்க்கப்படுகிறது…. ராட்வில்லர் நாய்களின் குணநலன்கள் பலரும் தற்போது பேசத் தொடங்கியுள்ளனர். ராட்வெலர் நாயானது மிகவும் ஆக்ரோஷமான நாய் வகையை சேர்ந்தது. இந்த ரக நாய்கள் பல நாடுகளில் அதிகளவிலான மக்களை கடித்தே கொன்றுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ராட்வெலர் நாய்களை வீடுகளில் வளர்க்க தடை போட்டுள்ளன. இந்தியாவிலும் இவ்கை நாய்கள் கடித்து பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு சென்னையில் தனது உரிமையாளரையே ராட்வெலர் வகை நாய் கடித்து கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வகை நாய்களால் பிறருக்கு மட்டுமல்ல, அதன் உரிமையாளர்களுக்கே ஆபத்துள்ளதாகவும் கருதப்படுகிறது. பெரும்பாலும் இந்த வகை நாய்கள் அதிகளவில் வேட்டைக்காகவே பயன்படுத்தப்பட்டன. காவல்துறையிலும் ராட்வெலர் நாய்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.

நாய்களை முதன்முதலாக வளர்க்க விரும்புபவர்களுக்கு, ராட்வில்லர் போன்ற நாய் வகைகள் எப்போதும் ஏற்றவையல்ல. நாய் வளர்ப்பில் அதிக முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இந்த வகை நாய்களை வளர்க்க முடியும். இவற்றை வளர்க்க அதிக நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மூலையில் நாள் முழுதும் கட்டிப்போட்டிருந்தாலும் அமைதியாக இருக்கும் பிற நாய்களை போன்றவை அல்ல ராட்வில்லர் வகை நாய்கள். அவை மிகவும் ஆக்ரோஷமானவை. போதிய கவனம் செலுத்தப்படாத பட்சத்தில், உரிமையாளர்களை தாக்கவும் அவை தயங்காது என அவர்கள் தெரிவிக்கின்றனர். மறுபுறம், முறையாக பயிற்றுவிப்பதன் மூலமும், அவற்றுடன் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலமும் ராட்வெலர் வகை நாய்களை கட்டுப்படுத்த முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. நாய் வளர்ப்பவர்களுக்கென்று பல்வேறு அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது. அவற்றை முறையாக கடைபிடிப்பது அவசியமாகும். தங்களது நாய்களை நல்ல முறையில் வளர்ப்பது மட்டுமல்லாமல், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், நாய் வளர்ப்பவர்களின் முக்கிய பொறுப்பாகும்.

 

Exit mobile version