இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்கள் குழுவில் மிக முக்கியமானவர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெற்று, பின்னர் முக்கியமான வர்ணனையாளராக மாறினார். இந்திய அணி விளையாடிய பல முக்கிய போட்டிகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றிய சஞ்சய் மஞ்ரேக்கர், வர்ணனைக்கு மட்டுமல்லாமல் சர்ச்சைகளிலும் பிரபலமானவர்.
இந்த நிலையில், வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து சஞ்சய் மஞ்ரேக்கரை கழற்றி விட்டது பிசிசிஐ. பிசிசிஐ-ன் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எனினும், சஞ்சய் மஞ்ரேக்கர் வர்ணனையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணங்களாக கிரிக்கெட் நோக்கர்கள் சில காரணங்களை முன்வைக்கின்றனர். அதில் முக்கியமானது, கடந்த 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ரவீந்திர ஜடேஜாவை அவர் சீண்டியது.
கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த போட்டியில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் 20 ஓவர்களில் 160 ரன்களை விட்டுக் கொடுத்தனர். இதனையடுத்து, போட்டி முடிந்ததும் ஜடேஜாவை அணியில் கொண்டு வருவது பற்றி சஞ்சய் மஞ்ச்ரேக்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சஞ்ரேக்கர், ”நான் துண்டு துணுக்கு வீரர்களுக்கு ரசிகனல்ல. ஜடேஜா டெஸ்ட் போட்டியில் முழு பந்துவீச்சாளர். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்யவே விரும்புவேன்,” எனத் தெரிவித்திருந்தார். அதுவரை இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த ஜடேஜா இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டு பொரிந்து தள்ளிவிட்டார்.
சஞ்சய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “நான் நீங்கள் விளையாடியதை விட இரு மடங்கு போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். சாதித்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நான் உங்கள் வார்த்தை வயிற்றுப்போக்கை போதுமான அளவு கேட்டுவிட்டேன்,” என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல தோனியை விமர்சித்து அவரது ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட சஞ்சய் மஞ்ரேக்கர், ஜடேஜா பற்றியும் பேசி வாங்கி கட்டிக்கொண்டார். இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான பிங்க் பந்து டெஸ்ட் போட்டியின்போது சகவர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவை வம்பிழுத்தது, ஐபிஎல் போட்டியின் போது பொல்லார்டை மூளையில்லாதவர் என்று விமர்சித்தது என்று அவரது க்ரைம்ரேட் ஏறிக்கொண்டே போனது. கடந்த ஆண்டில் மோசமான வர்ணனையாளராக கருதப்பட்டார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இதனால், அவர்மீது அதிருப்தியில் இருந்தது பிசிசிஐ நிர்வாகம்.
இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முன்பே ஹர்ஷா போக்லேவுக்கும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனுக்கும் முட்டிக்கொண்டது. இருவரும் மாற்றிமாற்றி விமர்சித்துக்கொள்ள, கடைசியாக வாகனை ட்விட்டரில் ப்ளாக் செய்துவிட்டார் சஞ்சய். சஞ்சய், மைக்கேல் ட்விட்டர் மோதலின் போது சஞ்சயை மறைமுகமாக விமர்சித்திருந்தார் கங்குலி. தனது ட்விட்டர் பக்கத்தில் “ட்விட்டரில் பதிவிடப்படும் அவரது கருத்துகள் அவரது பேட்டிங்கை போலவே அர்த்தமற்றவை மற்றும் யோசனை குறைபாடுடையவை; எதிர்மறையான வழியில் கவனத்தை பெறுபவராக இருக்கலாம்” என்று தெரிவித்திருந்தார்.
கங்குலி தற்போது பிசிசிஐ-ன் தலைவர் வேறு. சொல்லவா வேண்டும். சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு கட்டம் கட்டிவிட்டார்கள். கடந்த 12-03-2020 தரம்சாலாவில் நடைபெற்று மழைகாரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது வர்ணனையாளர் குழுவில் மற்ற பிசிசிஐ-ன் அங்கீகரிக்கப்பட்ட வர்ணனையாளர்களான சுனில் கவாஸ்கர், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால், சஞ்சய் மஞ்ரேக்கர் கழற்றிவிடப்பட்டிருந்தார். அடுத்த இரு போட்டிகளில் வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெறுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
குழுவில் இடம்பெறச் செய்யாமல் கழற்றி விடலாம் எதிர்பார்த்தார்களோ என்னவோ. கொரோனா கெடுத்துவிட்டது போல. வரவிருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்தும், பிசிசிஐ-ன் வர்ணனையாளர்கள் குழுவில் இருந்தும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இருந்தும் கழற்றிவிடப்பட்டதாக செய்திகள் கசிய ஆரம்பித்ததுமே தனது ஓய்வு அறிவிப்பை அறிவித்துவிட்டார் சஞ்சய் மஞ்ரேக்கர். ஓய்வு அறிவிப்பை அறிவித்தது மட்டுமல்ல, இதன் பிறகு என்ன செய்யப்போகிறேன் என்று அவர் சொல்லியிருப்பது நிச்சயம் பிசிசிஐ-யை வெறுப்பேற்றியிருக்கும். அனைத்துவிதமான கிரிக்கெட் வரணனையிலிருந்தும் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ள அவர், சானிடைசர் கடையை மும்பையில் திறக்க இருப்பதாகவும், பிசிசிஐ-யை விட அது நிறைய வருமானத்தை கொடுக்கும். கடை திறப்பு விழாவிற்கு ஹர்ஷா போக்லேவை தான் அழைப்பேன் என்று நக்கல் அடித்திருக்கிறார்.
சஞ்சயின் இந்த நக்கல் பேச்சுக்கு ஹர்ஷாவோ, பிசிசிஐ-யோ இன்னும் வாய் திறக்கவில்லை. ட்விட்டரில் சஞ்சய் மஞ்ரேக்கருக்கும் மற்றவர்களுக்கும் வார்த்தைப் போர் விரைவில் தொடங்கலாம். பொறுப்பில் இருந்ததால் மோசமான பேச்சுகளுக்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார் சஞ்சய். இனி அப்படியான பொறுப்புகளில் எதுவும் இல்லை. வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இனி சஞ்சய் லைம்லைட்டிலேயே இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
இவ்வளவு முக்கியத்துவம் பெறும் சஞ்சய் மஞ்ரேக்கர் 37 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, டெஸ்ட் போட்டிகளில் 2043 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1994 ரன்களும் எடுத்து இந்திய அணிக்கு சேவை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
– கிருஷ்ண குமார், கட்டுரையாளர்