இனி ஆட்டம் ஆரம்பம்! இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராகிறார் அஜித் அகர்கர்!

இந்திய கிரிக்கெட் அணியினைப் பொறுத்தவரை வலுவான அணியாக இருந்தாலும், ஏதாவது ஒரு முக்கிய கோப்பைப் போட்டிகளில் சொதப்பி விடுகின்றனர். அதற்கு அணியின் தேர்வுக்குழுவும் ஒரு காரணமாக இருப்பதால், இனி சரியான ஆட்டக்காரர்களை அணியில் தேர்வு செய்யும் பொருட்டு புதிய தேர்வுக் குழுத் தலைவரை பிசிசிஐ தற்போது நியமித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பின்னடைவு..!

இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா கேப்டன் பதவியேற்றதிலிருந்து இன்னும் உலக அளவில் ஒரு கோப்பைக் கூட வெல்லவில்லை. எல்லாவற்றிலும் இறுதி அல்லது அரையிறுதி வரை சென்று வெறும் கையுடன் திரும்பும் நிலையே இந்திய அணிக்கு வாய்த்திருக்கிறது. டி20 உலகக் கோப்பைத் தோல்வி, டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்வி என்று தொடர்ந்து முக்கியப் போட்டிகளில் தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணிக்கு தேர்வுக்குழுத் தலைவர் இல்லாதது மிகப் பெரிய பின்னடைவு என்று கிரிக்கெட் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முக்கிய வீரர்களான பும்ரா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் போன்றவர்கள் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தது, அவர்களுக்கு பதிலாக எடுக்கப்பட்ட வீரர்கள் முக்கியப் போட்டிகளில் ரன்கள் குவிக்காமலும், விக்கெட் எடுக்காமலும் இருந்ததால் இந்திய அணியின் ஃபார்ம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டிருந்தது. கோலி, ஜடேஜா போன்ற வீரர்கள் மட்டுமே ஓரளவுக்கு சோபிக்கின்றனர்.

தலைவர் ஆகிறார் அஜித் அகர்கர்..!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் ஷர்மா அணித்தேர்வின் உள்விவகாரங்களை வெளியில் கசிய விட்டதால் நீக்கப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து 5 மாதங்களுக்கு தேர்வுக்குழுத் தலைவர் பதவியானது காலியாக இருந்தது. தற்போது இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தேர்வுக்குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசோக் மல்கோதரா தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியானது அஜித் அகர்கரிடம் நேர்காணல் நடத்தி அவரை தேர்வு செய்துள்ளது. இதனை இந்திய் கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டது.

புதிய தேர்வுக்குழு உறுப்பினராக பொறூப்பேற்கும் அஜித் அகர்கர் மும்பையைச் சேர்ந்தவர். 45 வயதான அவர் இந்தியாவிற்காக 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 288 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 26 டெஸ்ட் மற்றும் 4 இருபது ஓவர் ஆட்டங்களிலும் ஆடியுள்ளார். இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த ஒரே பந்துவீச்சாளர் இவர்தான். தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டிசிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. அதற்கான அணியைத் தேர்வு செய்யும் பொறுப்பு அஜித் அகர்கரிடம் தரப்பட்டுள்ளது. மேலும் இவரைத் தவிர ஷிவ் சுந்தர் தாஸ், சலில் அங்கோலா, சுப்ரதோ பானர்ஜி, எஸ்.ஷரத் ஆகியோர் மற்ற தேர்வுக்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

Exit mobile version