குல்தீப் சுழல்! ஜடேஜா புயல்! தத்தளித்த வெஸ்ட் இண்டீஸ்! எளிதில் வென்ற இந்தியா!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று இரவு ஏழு மணி அளவில் பார்படாஸில் நடைபெற்றது. இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தி இந்தப் போட்டியில் வென்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சினை தேர்ந்தடுத்தார்.

வெஸ்ட் இண்டீசிற்கு ஒப்பனிங்கே அதிர்ச்சி காத்திருந்தது. பிரண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் ஜோடி மோசமான துவக்கத்தைக் கொடுத்தது. கைல் மேயர்ஸ் இரண்டு ரன்னுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய அதான்ஸ் 22 ரன்கள் அடித்து வெளியேறினார். இவரது விக்கெட்டை முகேஷ் குமார் எடுத்திருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்தார். பின் பிரண்டன் கிங் 17 ரன்களுக்கு ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

விழுந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை எழவிடாமல் மேற்கொண்டு அடிமேல் அடி அடித்தனர் குல்தீப் யாதவும், ஜடேஜாவும். கேப்டன் ஷாய் ஹோப் நன்றாக ஆட்டத்தை துவங்கினார். ஹெட்மயரும் அவருக்கு துணை நின்றார். ஆனால் ஜடேஜா என்கிற சுழல் சுனாமியிடம் சிக்கி ஹெட்மயர் 11 ரன்னில் நடையைக் கட்டினார். 18 வது ஓவரில் ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு முக்கியமான விக்கெட்டுகளையும் எடுத்துக் கொடுத்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பாவெல் 4 ரன்னுக்கும், நான்காவது பந்தில் ஷெப்பர்ட் ரன் எதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினார்கள். அதேபோல குல்தீப் சுழலில் டிரேக்ஸ், காஅரியா, ஷாய் ஹோப் (43 ரன்கள்) என்று நடையைக் கட்டினார்கள். இந்தியா சார்பில் குல்தீப் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர். மொத்தத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 114 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில்லும், இஷான் கிஷானும் ஆட்டத்தை துவக்கினர். ஆனால் ஷுப்மன் கில் 7 ரன்னில் கிளம்பினார். சூர்யகுமார் 19 ரன்னில் நடையைக் கட்ட, ஹர்திக் பாண்டியா 5 ரன்னில் ரன் அவுட் ஆனார். காரியா பந்தில் சிக்சர் அடித்த இஷான் அரை சதம் அடித்தார். இது இவரது நான்காவது அரைசதம் ஆகும். அடித்த வேகத்தில் 52 ரன்னில் பெவியிலியன் திரும்பினார். பிறகு வந்த ஷர்துல் தாக்குர் 1 ரன்னில் நடையைக் கட்டினார். கடைசியில் ரோகித் சர்மா களமிறங்கி ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இந்திய அணி 118 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 0-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Exit mobile version