ரேஷன் கடைகளில் கூடுதல் சர்க்கரை, உளுந்து வாக்குறுதி என்னானது? – முன்னாள் அமைச்சர் காமராஜ் கேள்வி

ரேஷன் கடைகளில் கூடுதல் சர்க்கரை, உளுந்து வழங்கப்படும் என்ற கொடுக்கப்பட்ட வாக்குறுதியை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமராஜ் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய அவர், நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கிய காலத்தில் இருந்து, 12 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த கிடங்குகளின் கொள்ளளவு, 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 23 லட்சம் மெட்ரிக் டன்னாக மாற்றியதாக பெருமிதம் தெரிவித்தார்.

காகித வடிவில் இருந்த குடும்ப அட்டையை ஸ்மார்ட் கார்டாக மாற்றுவதற்கான அறிவிப்பை கொடுத்து அதை செயல்படுத்தியதும் அதிமுக அரசு என்று குறிப்பிட்டார்.

விலையில்லா அரிசி கொடுத்து பசியில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா என்று குறிப்பிட்ட அவர், இஸ்லாமியர்களுக்கு நோன்பு காலத்தில் கஞ்சிக்கு அரிசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக செயல்படுத்தியது அதிமுக அரசு என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யலாம் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 500 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

மழையில் நனைத்து நெல் மூட்டைகள் வீணாவதை தடுக்கவும், நெல் கொள்முதலில் உள்ள முறைகேடுகள் மற்றும் பாதிப்புகsளை உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் வலியுறுத்தினார்.

Exit mobile version