குடியரசு தினத்தின் வரலாறு என்ன? குடியரசுதினம் கடந்து வந்த பாதையை விளக்குகின்றது இந்தத் தொகுப்பு…
குடியரசுதினம் எனும் முதல் சுதந்திர தினம்!
சுதந்திரப் போராட்ட காலத்தில் அன்றைய காங்கிரஸ் பேரியக்கம் நெடுங்காலமாக ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்ட சுய ஆட்சி உரிமையையே கோரியது.
இந்நிலையில் இந்தியாவில் பெருகிய பொருளாதார மந்த நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை இவற்றின் காரணமாக, ஆங்கிலேயர்கள் முழுமையாக வெளியேறி ‘பூரண சுயராஜ்ஜியம்’ அடைவதே இந்திய சுதந்திரப் போரின் இலக்கு என்பது 1929ஆம் ஆண்டு டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான மாநாட்டில் தான் முதன்முறையாக அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மகாத்மா காந்தி இந்தியர்களை சுதந்திர தினம் கொண்டாட அழைத்தார், இந்த அழைப்பை ஏற்ற இந்திய மக்கள் 1930ஆம் ஆண்டு முதல் ஜனவரி 26ஆம் தேதியை தங்கள் சுதந்திர தினமாகக் கொண்டாடினர். இந்நிலையில் 1947ஆம் ஆண்டின் ஆகஸ்டு 15ஆம் தேதி, ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியதால், இந்தியாவின் சுதந்திர தினம் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனவரி 26 என்பதில் இருந்து ஆகஸ்டு 15க்கு மாறியது.
ஆனாலும், ஜனவரி 26ஆம் தேதி தனது சிறப்பை இழக்கக் கூடாது என்று அன்றைய தேசத் தலைவர்கள் விரும்பினர். இந்நிலையில், 1949ஆம் ஆண்டின் நவம்பரில் இந்தியாவின் அரசியல் அமைப்பை டாக்டர் அம்பேத்கர் எழுதி முடித்தார்.
அந்த அரசியல் அமைப்பை 1950ஆம் ஆண்டின் ஜனவரி 26ஆம் தேதியில் அமல்படுத்துவதன் மூலம், ஜனவரி 26ஆம் தேதிக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று நவம்பர் 26ஆம் தேதி ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. இதன் மூலம் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினமாக மாற்றப்பட்டது.
அடிப்படையில் இந்தியாவில் அரசியல் அமைப்பு அமலுக்கு வந்த நாளே அதன் குடியரசுதினம் என்றாலும், வரலாற்றுப் பார்வையில் ஜனவரி 26ஆம் தேதிதான் இந்தியாவின் முதல் சுதந்திர தினமும் ஆகும்!.