மீனவ சொந்தங்களை காப்பாற்ற தமிழ்நாடு அரசு என்ன செய்ய போகிறது?

குமரி மாவட்ட மீனவர்கள் 14 பேர் ஆழ்கடலில் மாயம், கடலுக்கு சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 9 பேர் காணவில்லை.

கடலில் தத்தளிக்கும் சொந்தங்களை மீட்க மன்றாடியும், மீனவர்கள் மீது துளியும் அக்கரை இல்லாமல் பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறது தமிழக அரசு.

 

 

தமிழக கடல் பரப்பில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள போது, தமிழக மீனவர்கள் கேரள துறைமுகங்களில் இருந்து மின்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்வர்.

அதன்படி, கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் கடந்த மாதம் 29ஆம் தேதி அரபிக்கடலுகு மீன்பிடிக்க சென்றனர்.

டவ்தே புயலில் நாகை மீனவர்களின் படகு சிக்கி கடலில் மூழ்கியது.

இம்மாதம் 15ஆம் தேதி வரை மாயமான 9 மீனவர்களின் நிலை குறித்த தகவல் இல்லை.

மாயமான மீனவர்களை மீட்க கோரி அவர்களின் சொந்தங்கள் பல முறை கோரிக்கை வைத்து செவி சாய்க்காத முதலமைச்சர் ஸ்டாலின், மீனவர்களை மீட்க கோரி மத்திய அரசு கடிதம் எழுதியதோடு நிறுத்திக் கொண்டார்.

இதேபோல், கடந்த ஐந்தாம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே இருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு 16 மீனவர்கள் சென்றனர்.

அவர்களில் 12 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

மற்ற 4 பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.

டவ்தே புயல் கடந்து சென்ற பிறகு மீனவர்களின் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காணாமல் போன மீனவர்களின் நிலை குறித்து மீனவ சமுதாய மக்கள் பெரும் துயரத்துடனும் பதற்றத்துடன் நாட்களை கடத்தி வரும் நிலையில், தேடுதல் பணியை தீவிரப்படுத்த மாநில அரசு இப்போதாவது அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மீண்டும் கடிதம், இம்முறை பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு என கடமையை அத்துடன் நிறுத்திக்கொண்டார் ஸ்டாலின்.

39 எம்பிக்கள் இருந்தும் ஒருவரையும் நேரடியாக அனுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க திமுக தயாராக இல்லையா?

மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையே நடவடிக்கை எடுத்துவிட்டதாக திமுக அரசு கருதுகிறதா என்பது மீனவ மக்களின் கேள்வியாக உள்ளது.

மீனவர்கள் கடலில் மாயமான தகவல் கிடைத்தவுடன், அடுத்த தகவல் வரும் வரை அரசு காத்திருக்கிறது.

5, 6 நாட்களுக்கு பிறகு நிலைமை மோசமாகிறது என்பதை உணர துவங்கிய பின், துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்.

ஒரு ஆபத்து நேர போகிறது என்பதை அறிந்தபின் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், சேதம் நிகழ்ந்த பின் அரிசியும், பணமும் கொடுப்பது நிவாரணமாக கருதாமல், இயற்கை சீற்றத்தை தெளிவாக உணர்ந்து ஆபத்துகளை குறைப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும்.

மகன்களை காணாத தாய்மார்கள் ஓலமிட,

கணவனின் வருகையை எதிர்பார்த்து கைக்குழந்தைகளை இறுக பற்றிக்கொண்டு தொண்டைக்குழியில் துயரம் தேங்கியிருக்க காத்திருக்கும் இளம்பெண்கள் ஏராளம்…

இவர்களின் கண்ணீரை துடைக்க அரசு இனியாவது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமா என்பதே துயரத்தோடு காத்து கிடக்கும் மீனவ மக்களின் எதிர்ப்பாக இருக்கிறது.

Exit mobile version