திமுக கூட்டணி தள்ளாடக் காரணம் என்ன?

திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அந்தக் கூட்டணியில் இருந்து விரைவில் விலகுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கணிப்பின் பின்னணி என்ன? திமுக கூட்டணி தள்ளாடக் காரணம் என்ன? – பார்க்கலாம்.

திமுக கூட்டணி உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே, திமுக மீது அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. இவர்கள் தங்களுடன் நெடுநாட்கள் நிலைத்து இருக்க மாட்டார்கள் என்பதை திமுகவும் அறிந்தே இருந்தது. அதனால்தான் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக தொடர்ந்து வலியுறுத்திவந்தது.

தங்கள் கட்சியின் இன்னொரு வேட்பாளரான ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட போதும், விசிக தலைவர் திருமாவளவன் பானை – என்ற தனிச் சின்னத்தில்தான் தேர்தலை சந்தித்தார். இந்த முடிவு அவர் திமுக மீது கொண்ட அதிருப்தியைக் காட்டுவதாக இருந்தது.

4 தொகுதி இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர், அவற்றில் 3 தொகுதிகளில் சிறுபான்மையினருக்கு கணிசமான வாக்குகள் இருந்தும் கூட அங்கெல்லாம் திருமாவளவன் பிரசாரம் செய்யவில்லை அல்லது திமுக தலைமை அவரை பிரசாரத்திற்கு அழைக்கவில்லை.

இந்த நிலையில், ஆங்கில இதழ் ஒன்றுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில்,‘வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வீர்களா?’ – என்ற கேள்விக்கு ’இப்போதுதான் மக்களவைத் தேர்தல் முடிந்திருக்கிற நிலையில் சட்டமன்றத் தேர்தல் பற்றி பேசுவது சரியாக இருக்காது. ஆனாலும் கூட்டணி பற்றி என்னைக் கேட்டீர்கள் என்றால், ஒரு கூட்டணி என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது. நாங்கள் இப்போது வளரும் கட்சி. நாட்டின் முக்கிய பிரச்னைகளில் திமுக, அதிமுக என்ன நிலைப்பாடு மேற்கொள்கின்றன என்பதைப் பொறுத்தே நாங்கள் கூட்டணி பற்றி முடிவெடுப்போம்’ – என்று பதில் கூறி உள்ளார்.

திருமாவளவனின் இந்த பதில் மக்களவைத் தேர்தல் முடியும் முன்னரே திமுகவின் கூட்டணி கலகலத்துவிட்டதையே காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். செயல்தலைவராக பல தோல்விகளை கண்ட ஸ்டாலினுக்கு தலைவராக இது அரசியல் ராஜதந்திரத்தில் ஒரு மாபெரும் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் திமுகவின் கூட்டணி விரைவில் உடையும் என்பது உறுதியாகி உள்ளது.

Exit mobile version