அமெரிக்க தயாரிப்பான அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே இந்திய விமானப்படையில் இணைக்கபட்டுள்ள நிலையில் மேலும் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அப்பாச்சி ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள் என்ன ?
உலகில் உள்ள ராணுவ பலம் மிகுந்த நாடுகளின் விமானப்படைகளில் பிரபலமாக பயன்படுத்தப்படுத்தபட்டு வருவது போர் திறன் மிக்க அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள்.
இரண்டு சக்திவாய்ந்த டர்போஷாஃப்ட் ரக என்ஜின்களை கொண்ட இந்த ஹெலிகாப்டர் எந்தவொரு மோசமான வானிலையையும் சிறப்பாக எதிர்கொண்டு பறக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது..
அதிவேகமாக சுழலும் பிளேடுகளோடு மணிக்கு 293 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டர் ஒரு நிமிடத்தில் 2,800 அடி உயரம் வரை மேல்நோக்கி செல்லக்கூடியது. மேலும், இது தொடர்ச்சியாக ஆயிரத்து 200 குண்டுகளைச் சுடும் வல்லமை பெற்றது.
நிமிடத்திற்கு 128 இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இந்த அப்பாச்சி ஹெலிகாப்டரானது, துப்பாக்கிகள், ராக்கெட்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை அதிகளவில் சுமந்து செல்லும் திறன்கொண்டது.இரவு நேரத்தில் கூட எதிரிகளைப் பின்தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக அதிநவீன தொலைநோக்கிகள், லேசர், இன்ஃபராரெட், மற்றும் சென்சார்கள் உள்ளிட்ட தொழில் நுட்பங்களும் இதில் பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், கிரீஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்கள் விமானப்படையில் அதிசக்தி வாய்ந்த Apache AH-64 ரக ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகின்றன.இவ்வகை ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவின் மிக பிரபலமான வானுர்த்தி தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும், இதுவரை 2200 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் போயிங் நிறுவனத்தால் விற்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான், ஈராக், உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற போர்களில் அமெரிக்க ராணுவத்திற்கு பலம் சேர்த்த இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை தற்போது இந்தியாவும் வாங்கியுள்ளது. இதன்மூலம் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தும் 14-வது நாடாக இந்தியா உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.