கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவம் குறித்து, பரப்பப்பட்டு வரும், அனைத்து அவதூறுகளுக்கும் முன்னாள் அமைச்சர் செம்மலை ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை, தேர்தலை கருத்தில் கொண்டு, கொடநாடு விவகாரத்தில் எந்த முகாந்திரமும் இல்லாமல், முதலமைச்சர் மீது புலனாய்வு செய்தியாளர் மேத்யூஸ் மற்றும் திமுக இணைந்து சதி செய்து வருவதாக தெரிவித்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, அவர் இறந்து விடுவார் என கருதிய கார் ஓட்டுநர் கனகராஜ் , கேரளாவைச் சேர்ந்த சயனை தொடர்பு கொண்டு, கொடநாடு சம்பவத்திற்கு திட்டமிட்டதை செம்மலை சுட்டிக்காட்டினார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே கொடநாடு சம்பவத்திற்கு திட்டமிடப்பட்ட நிலையில், இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எப்படி தொடர்புபடுத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
கனகராஜ் மற்றும் சயன் ஆகியோரின் வாகனங்கள், மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கிய நிலையில், இந்த விபத்தால் ஏற்பட்ட மரணங்களை எப்படி மர்ம மரணங்கள் என கூற முடியும் என்றும் செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சுமார் 22 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், முதலமைச்சரை தொடர்பு படுத்தி, எந்த இடத்திலும் குற்றவாளிகள் வாக்குமூலம் அளிக்காத நிலையில், திடீரென இந்த குற்றச்சாட்டை தற்போது சுமத்துவது ஏன் என்றும் செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார்.
2ஜி வழக்கில் ஒரு பெரிய மனிதரை காப்பாற்றவே சாதிக் பாட்ஷா மரணம் நிகழ்ந்ததாக சந்தேகம் நிலவும் சூழலில், தான் திருடி பிறரை நம்பாள் என்ற ரீதியில் திமுக, கொடநாடு விவகாரத்தை கையாண்டு வருவதாக செம்மலை குற்றம் சாட்டியுள்ளார்.
கொடநாடு வழக்கு தொடர்பான விவரங்கள் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எப்படி தெரிந்தது என்றும் சம்பவங்களை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் ஆ.ராசா கூறுகிறார் என்றால், சயனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்றும் செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள நேர்ந்தால், எந்த சூழலிலும் அதற்கு அ.தி.மு.க. தயாராக உள்ளதாகவும் செம்மலை விளக்கம் அளித்துள்ளார்.