அவதூறு வழக்கை விசாரணையை எதிர்கொள்ள ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்?

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி ஸ்டாலின் பேசினால், அவர் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு விதித்த தடை நீக்கப்படும் என எச்சரித்த உயர்நீதிமன்றம், அவதூறு வழக்கை விசாரணையை எதிர்கொள்ள ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேசியதற்காக ஸ்டாலின் மீது
மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் எதிர்தரப்பினர், அவதூறு வழக்கிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றனர். இதனிடையே தமிழக அரசு சார்பில் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு விதித்த தடையை நீக்கக் கோரியும், கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரைப்பற்றி பேச தடைகோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி இளந்திரையன் முன்பு,விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி வாதாடினார். பின் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை பெற்றுள்ள ஸ்டாலின், ஒவ்வொரு கூட்டத்திலும் கொடநாடு விவகாரம் பற்றி பேசுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மேலும் இது தொடர்பாக ஸ்டாலினுக்கு உரிய அறிவுரை வழங்கும்படி அவரது வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கொடநாடு விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் இனியும் பேசினால், அவர் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டு, கீழமை நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்குமாறு உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.

Exit mobile version