அமெரிக்காவில் இ சிகரெட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இ சிகரெட் என்றால் என்ன? ஏன் இந்தத் தடை?
சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து வெளிவர உதவும் சாதனம் – என்றே இ சிகரெட்டுகள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. பேட்டரியில் இயங்கும் இவை உலகின் பலநாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளன, இவற்றில் பல வகைகளும் உள்ளன.
உலக அளவில் அமெரிக்காவில்தான் இ சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
இந்நிலையில், உலக அளவிலான சமீபத்திய ஆய்வுகள் ‘இ சிகரெட்டுகளின் பாதிப்புகள் புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இணையாகவே உள்ளன’ – என்று கூறின. இதனால் தமிழக அரசு கூட, இ சிகரெட் உள்ளிட்ட புகையிலை மாற்றுப்
பொருட்கள் தமிழகத்தில் தடை செய்யப்படுவதாக கடந்த 2018 ஜூனில் அறிவித்தது, அதே ஆண்டு செப்டம்பரில் இதற்கான அரசாணையும் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதனையடுத்து இந்திய அரசும் இ சிகரெட்டை தடை செய்துள்ளது. உலகில் இந்தியா, தென் கொரியா, பிரேசில் – உள்ளிட்ட பல நாடுகளில் இ சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டாலும், அமெரிக்கா மட்டும் தொடர்ந்து இ சிகரெட்டுக்கு ஆதரவாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாகாணத்தில், இ சிகரெட் பாதிப்பால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்தது. மேலும் அமெரிக்காவின் 22 மாகாணங்களில் இன்னும் 200க்கும் மேற்பட்டவர்கள், இ சிகரெட் பயன்பாட்டினால் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்தது.
இதனையடுத்து அமெரிக்காவிலும் இ சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இ சிகரெட்டுகளால் இதுவரை 55க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும், 2500க்கும் மேற்பட்டவர்கள் நோய்களுக்கு ஆளாகி உள்ளதாகவும் அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், மருத்துவர்கள் சங்கத்தின் தொடர் எச்சரிக்கைகளை அடுத்து, குறிப்பிட்ட சிலவகை இ சிகரெட்டுகளுக்கு மட்டும் தடை விதிப்பதாக அமெரிக்கா தற்போது அறிவித்து உள்ளது. அதாவது, புதினா மற்றும் பழங்களின் சுவை கொண்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், புகையிலை மற்றும் பச்சை கற்பூரம் சுவை கொண்ட இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு எந்தத் தடையும் இல்லை. அமெரிக்காவில் விரைவில் அனைத்துவகை இ சிகரெட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும் – என்பதுதான் மருத்துவ சங்கத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.